TN Assembly Election| முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் முதல் சூறாவளி பிரசாரம்- சுற்றுப்பயண திட்டம் தயாராகிறது

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
TN Assembly Election| முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் முதல் சூறாவளி பிரசாரம்- சுற்றுப்பயண திட்டம் தயாராகிறது
Published on

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற

30-ந்தேதி தொடங்க இருக்கிறது.

இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, ம.தி.மு.க.வுக்கு 4, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு ஓரிரு நாளில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு விடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 17-ந் தேதி முதல் நேர்காணல் நடத்தி வருகிறார். இன்றுடன் நேர்காணல் முடிவடைகிறது.

இதைத் தொடர்ந்து எந்தெந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பது, தி.மு.க. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்ற பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

அனேகமாக இந்த பணிகள் 3 நாளில் முடிக்கப்பட்டு விடும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.- கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டம் மாவட்டமாக சென்று பிரசாரம் செய்ய இருக்கிறார்.

அனேகமாக தி.மு.க. தேர்தல் அறிக்கை 2-ந்தேதி வெளியிடப்படும் என தெரிகிறது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார்.

அதன் பிறகு 3-ந்தேதியில் இருந்து முதமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு புறப்படுவார் என அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் தி.மு.க. இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்ய இருக்கிறார். அவரது பிரசார சுற்றுப்பயண திட்டமும் தயாராகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com