கோவையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

முதலமைச்சரின் பிரசாரத்தையொட்டி கோவை கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
Published on

கோவை:

தமிழக சட்டசபைக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவர் தனது பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கினார். நேற்று திருச்சி, கரூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர் இன்று மாலை கோவையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இருந்து கார் மூலமாக இன்று மாலை கோவைக்கு கொடிசியா மைதானத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

வரவேற்பு முடிந்ததும் அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடைக்கு செல்கிறார். அங்கிருந்தபடி கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, கிணத்துக்கடவு, சூலூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட தொகுதிகளை சார்ந்த வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, ஆதரவு திரட்ட உள்ளார்.

இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

இந்த பிரசாரத்தை முடித்து கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் கோவை விமான நிலையம் சென்று, விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.

முதலமைச்சரின் பிரசாரத்தையொட்டி கோவை கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் மக்கள், கட்சியினர் அமரும் வகையில் இருக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1000 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரசார கூட்டம் நடைபெறும் பகுதி உள்பட பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

மாநகரில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். வெளியூரில் இருந்து கோவை மாநகர பகுதிக்குள் வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com