"ஈமச்சடங்கு பெயரால் தாமிரபரணியை மாசுபட அனுமதிக்க முடியாது!"-உயர்நீதிமன்ற மதுரை கிளை

அதேபோல நதிகள் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
Cannot allow Thamirabarani to be polluted
Published on

"மதத்தின் பெயரிலோ அல்லது சடங்குகளின் பெயரிலோ பொது நீர்நிலைகளை மாசுபடுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது" என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் ஈமச்சடங்குகள் என்ற பெயரில் டன் கணக்கில் ஆடைகளும், கழிவுகளும் கொட்டப்படுவதற்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தின் நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, தங்களின் ஆழ்ந்த கவலையையும் வேதனையையும் பதிவு செய்தனர்.

அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்:

தாமிரபரணி நதியைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர் மூர்த்தி மற்றும் 'அரிப்புகாரர்கள்' குழுவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை மற்றும் சி.கலாவல்லி எழுதிய “தாமிரபரணி நதிநீர் தூய்மை விழிப்புணர்வு” புத்தகத்தின் தரவுகள் நீதிபதிகளை அதிர்ச்சியடைய வைத்தன.

கடந்த மே 7 முதல் மே 28 வரையிலான வெறும் 21 நாட்களில் மட்டும் தாமிரபரணி ஆற்றில் இருந்து பழைய ஆடைகள் மற்றும் துணிகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் 86 முதல் 90 டன்கள் வரை அகற்றப்பட்டுள்ளன.

ஆமைகளுக்கு நேரும் ஆபத்து:

ஆற்றில் வீசப்படும் துணிகளில் சிக்கி, இந்தியக் கரு ஆமைகள் போன்ற அரிய வகை நீர்வாழ் உயிரினங்கள் மூச்சுத்திணறி உயிரிழப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 'பிரிவு 25-ன் படி', மத சுதந்திரம் என்பது பொது சுகாதாரத்திற்கு உட்பட்டதே தவிர, அதற்கு அப்பாற்பட்டது அல்ல. அதேபோல நதிகள் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பது 'பிரிவு 51A(g)-ன் கீழ்' ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:

பொதுமக்களின் மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றாலும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணியை இப்படிச் பாழாக்க அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறினர்.

எனவே, சடங்குகளை ஆற்றிற்குள் செய்யாமல், ஆற்றங்கரையின் அருகே அமைக்கப்பட்டு வரும் பிரத்யேகக் குளங்களைப் பயன்படுத்துவது போன்ற மாற்று வழிகளை மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடுமாறும், நிரந்தரத் தீர்வுக்கான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றும் ஆன்மிக அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com