ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்ல தடை விதிப்பு

ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
Fishing Boats
Published on

ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்களில் வருகிற 21-ந் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது‌. அதே நேரத்தில் தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். அவ்வப்போது ராட்சத அலைகள் எழும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு

அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான அனுமதி நேற்று வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ள பகுதியில் இருந்து விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள் பெருமளவு கடலுக்கு செல்லவில்லை.

2-வது நாளான இன்று ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக இன்றும் மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.

மீன்பிடி தடை

ராமேசுவரம், மண்டபத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி தடை காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

நாளை விடுமுறை நாள் என்பதால் மீன் வர்த்தகம் அதிக அளவில் இருக்கும் என்ற நிலையில் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராமேசுவரத்தில் மீன் வரத்து இல்லை. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

தனுஷ்கோடியில் கடந்த 2 நாட்களாக வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் போலீசாரும் தனுஷ்கோடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com