‘தமிழ்நாட்டில் திமுக இருக்கும்வரை ஒருபோதும் காவிக்கொடி பறக்காது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
‘தமிழ்நாட்டில் திமுக இருக்கும்வரை ஒருபோதும் காவிக்கொடி பறக்காது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

“தமிழ் - தமிழினம் - தமிழ்நாடு இந்தச் சொற்களைக் கேட்டாலே கசக்கும் கூட்டம், நம்முடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்று சதி வேலையைச் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மதவெறியை வளர்த்து, அதன் மூலமாக இந்த நாட்டை ஆள்வதற்குப் பாசிச பா.ஜ.க. செய்திருக்கும் சூழ்ச்சிதான், தொகுதி மறுவரையறை.

தென் மாநிலங்களில் தேர்தல் என்பது வெறும் சம்பிரதாயம்தான். மேலோட்டமாகப் பார்த்தால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் சொல்வது போன்று, நம்முடைய தொகுதி எண்ணிக்கையை அதிகரிப்பது போன்று, ஒரு ‘ஷோ’ தெரியும்; ஆனால், உள்ளபடியே நமக்கு வர வேண்டிய எம்.பி.-க்கள் எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறார்கள்.

இந்தச் சதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நான் கருப்புக் கொடி ஏற்றினேன். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டித் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் என்னுடைய எதிர்ப்பு என்பது, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பு.

இதை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டு, டி.ஆர். பாலு பேசினார். அதற்கு, மக்களவைத் தலைவராக அனைவருக்கும் பொதுவானவராக நடந்து கொள்ள வேண்டிய சபாநாயகர் ஓம் பிர்லா, "நீங்கள் கருப்புக் கொடி ஏற்றினால் என்ன? நீலக்கொடி ஏற்றினால் என்ன?" என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். அவர் தனிப்பட்ட ஸ்டாலினை அவமதிக்கவில்லை; தமிழ்நாட்டின் குரலை – உணர்வுகளை ஏளனப்படுத்திப் பேசினார்.

இன்றைக்கு அதற்கான பதிலடியை அருமைத் தங்கை கனிமொழி நாடாளுமன்றத்தில் தந்திருக்கிறார். தமிழர்களை அவமதிப்பதை மட்டுமே தங்களுடைய நோக்கமாக வைத்துப் பேசும் பா.ஜ.க.வின் குரலாக இருக்கும் ஓம் பிர்லா அவர்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன். இந்த மண்ணில் சமத்துவம், சமூகநீதி, பொதுவுடைமைக்கான, கருப்பு – சிவப்பு – நீலக் கொடிகள்தான் பறக்கும்!

இன்னும் சொல்கிறேன்… திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் வரை, உங்களுடைய காவிக் கொடி ஒருபோதும் இங்கே பறக்காது! தன்மானமுள்ள தமிழர்கள் பறக்கவும் விடமாட்டார்கள்!

நாடாளுமன்றத்தில் இன்றைக்கு நம்முடைய அத்தனை உரிமைகளையும் பறிக்கப் பார்க்கிறார்கள்; இந்த அநீதிக்கு முடிவுரை எழுத வேண்டும்; அதற்குத் தமிழ்நாட்டில் வலிமையான நம்முடைய மாநில அரசு அமைய வேண்டும்! தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நெஞ்சுரத்தோடு போராடும் அரசு அமைய வேண்டும்! அதற்காகத்தான், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்கு கேட்க உங்களில் ஒருவனாக நான் இங்கு வந்திருக்கிறேன்.

தமிழ்நாடா? டெல்லியா? என்ற இந்தப் போரில், பா.ஜ.க. எனும் சர்வாதிகார பருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும்! பா.ஜ.க.வுக்குத் துணைபோன துரோகத்தின் முழு உருவமான பழனிசாமியின் அடிமை அ.தி.மு.க. துரத்தியடிக்கப்பட வேண்டும்” எனப் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com