

கோவை:
தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு கட்சிக்கும் பிளஸ், மைனஸ் இருக்கும். அ.தி.மு.க பாஜக கூட்டணியின் பிளஸ் கொங்கு மண்டலம். எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி எடப்பாடி காலம் வரை கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க வலுவாகவே உள்ளது.
பா.ஜனதாவும் இங்கு கணிசமாக வளர்ந்து வருகிறது. 2026 சட்டசபை தேர்தலில் அதனை தக்க வைப்பதற்காக அ.தி.மு.க.வும், பா.ஜ.கவும் தீவிர களப்பணியாற்ற தொடங்கியுள்ளது.
கடந்த 2021 தேர்தலை போன்று இந்த முறையும் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகளில் தற்போது தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வானது முழு வீச்சில் நடந்து வருகிறது.
கடந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் இடம்பிடித்திருந்த பா.ஜ.க கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டது. தற்போதும் கூட்டணியில் உள்ள பா.ஜ.க இந்த முறை 2 தொகுதிகளை கோவையில் எதிர்பார்க்கிறது.
குறிப்பாக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் கோவையில் 2 தொகுதிகளை கட்டாயம் பா.ஜ.க எதிர்பார்த்திருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை இந்த முறை தனது பார்வையை கோவை பக்கம் திருப்பியுள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை இங்கு 4.50 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். இதன் காரணமாக அவர் இந்த தேர்தலில் கரூருக்கு பதிலாக கோவையில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாராளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே தனது முகவரியையும் கோவைக்கு அவர் மாற்றிவிட்டார்.
கோவையில் அண்ணாமலை தான் போட்டியிட 2 தொகுதிகளை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒன்று சிங்காநல்லூர் மற்றொன்று கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிகளாகும்.
கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலை சிங்காநல்லூரில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அங்கு தற்போதைய எம்.எல்.ஏ. கே.ஆர். ஜெயராம் தீவிர களப்பணியாற்றி வருகிறார். அவரே அங்கு மீண்டும் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு கோவையில் ஒரு தொகுதியை மட்டுமே கொடுக்க விரும்புகிறது. மீதமுள்ள தொகுதிகளில் தாங்கள் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் அண்ணாமலையை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போட்டியிடுமாறு அக்கட்சி வலியுறுத்தி வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள தனது இல்லத்தில் சிங்காநல்லூர் தொகுதியின் பா.ஜனதா நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் அவர் மீண்டும் சிங்காநல்லூர் தொகுதியில் களம் காண உள்ளதாக தகவல்கள் பரவியது.
இதற்கிடையே அண்ணாமலை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அங்கு பா.ஜனதாவுக்கு ஆதரவு எப்படி உள்ளது.
அங்கு கடந்த கால தேர்தல்களில் பெற்ற வாக்குகள் சதவீதம் உள்ளிட்டவை குறித்தும் அவர் அவர்களிடம் கேட்டறிந்துள்ளார். சிங்காநல்லூரில் போட்டியிட விரும்புவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கவுண்டம்பாளையம் தொகுதி நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டதன் மூலம் அவர் கவுண்டம்பா ளையத்தில் போட்டியிடலாம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கவுண்டம்பாளையம் தொகுதியில் பா.ஜனதாவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதனால் அவர் அந்த தொகுதியை தேர்ந்தெடுத்து இருக்கலாம் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கவுண்டம்பாளையத்தில் தற்போதைய சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமார் தொகுதி முழுவதும் களப்பணியாற்றி வருகிறார். அவரே மீண்டும் போட்டியிடுவார் என அ.தி.மு.க.வினர் தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் அண்ணாமலை அங்கு போட்டியிடுவாரா? அல்லது கோவையில் உள்ள வேறு தொகுதியில் போட்டியிடுவாரா என்பது சில நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியான பின்பு தெரிந்து விடும்.