TN Assembly Election| கணிக்க முடியாத தேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்?

மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற 29-ந்தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதால் அதன் பிறகு தான் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளையும் வெளியிட முடியும் என்கிற நிலையுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் விசில், இரட்டை இலை தாமரையுடன் கூடிய புகைப்படத்தை படத்தில் காணலாம்.
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் விசில், இரட்டை இலை தாமரையுடன் கூடிய புகைப்படத்தை படத்தில் காணலாம்.
Published on

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? என்கிற விவாதம் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய விவாதமாகவே உருவெடுத்துள்ளது.

இதற்கு முன்பு நடைபெற்றுள்ள பெரும்பாலான சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சி அமைக்கப் போவது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என்கிற கேள்வி பிரதானமாக உருவெடுத்திருக்கும்.

தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் யாருக்கு மக்கள் அதிகளவு வாக்களித்திருக்கிறார்கள் என்கிற ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் மூலமாக 2 கட்சிகளில் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதை துல்லியமாக கணித்து விட முடிந்துள்ளது.

இதன் காரணமாக இந்த கட்சிதான் ஆட்சியில் அமரப்போகிறது என்பது தெரிந்துவிடும் என்பதால் கடந்த முறை அவர்கள் ஆட்சி செய்தார்கள். இனி இவர்கள் ஆட்சி செய்யப் போகிறார்கள் என்று தமிழக வாக்காளர்களும் கடந்து சென்று விடுவார்கள்.

ஆனால் நடந்து முடிந்து உள்ள தேர்தல் களம் எப்போதும் இல்லாத வகையில் கணிக்க முடியாத தேர்தல் களமாகவே மாறி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

இந்த தேர்தலில் தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு போட்டியாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களம் இறங்கி அதிகளவில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளை பெற்றிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்து வருகிறார்கள்.

இதுபோன்று விஜய் பிரிக்கும் வாக்குகள் அரசியல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? என்பது வருகிற மே 4-ந்தேதிதான் தெரியும். என்றாலும் அது தொடர்பான காரசார விவாதங்கள் திரும்பிய திசை எல்லாம் எதிரொலித்துக் கொண்டு உள்ளன.

விஜய் குவிக்கும் வாக்குகள் எங்களை அதிகளவில் பாதிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தி.மு.க.வினரும். விஜய் குவிக்கும் வாக்குகள் எல்லாம் தி.மு.க.வின் வாக்குகள் தான் என்று அ.தி.மு.க.வினரும் கூறி வருகிறார்கள்.

இப்படி விஜய் பிரிக்கும் வாக்குகள் எங்களுக்கு சாதகமாகவே அமையும் என்று இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் நம்பியிருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளோ இந்த முறை மக்கள் மாற்றத்தை விரும்பி விசில் சின்னத்துக்கு தான் வாக்களித்திருக்கிறார்கள். நாங்கள்தான் ஆட்சியில் அமர்வோம். அது நிச்சயம் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றமாக இருக்கும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை யார் வெற்றி பெறுவார்கள்? அடுத்து யாருடைய ஆட்சி அமையும்? என்பது மிகப்பெரிய விவாத பொருளாகவே மாறி உள்ளது. பணிபுரியும் இடங்கள், டீக்கடைகள், சிறிய பெட்டிக்கடைகள், மார்க்கெட்டுகள் என எங்கு பார்த்தாலும் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.

ஒருவருக்கொருவர் மாறி மாறி இந்த கேள்விகளை கேட்டுக்கொண்டு உங்களுக்கு என்ன தகவல் கிடைத்துள்ளது? யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

இதன் மூலம் வாக்குப்பதிவு முடிந்த நாளில் இருந்து தொடர்ச்சியாக தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? என்பது பற்றி பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும் என்று அந்தக் கட்சிகளின் நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்து யார் யாருக்கு? எந்த அமைச்சர் பதவி என்கிற பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.

இதேபோன்று தி.மு.க.வினர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று பதிவிட்டு அவர்களும் தங்கள் தரப்பு அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒரு படி மேலே போய் யார் யாருக்கு எந்தெந்த இலாகாக்கள் என்கிற பட்டியலுடன் பெயர் விவரங்களையும் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.

இப்படி தேர்தல் முடிவுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் யார் அமரப்போவது? என்கிற விவாதங்கள் மேலும் சூடு பிடிக்கவே வாய்ப்புள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற 29-ந்தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதால் அதன் பிறகு தான் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளையும் வெளியிட முடியும் என்கிற நிலையுள்ளது.

இதனால் 29-ந் தேதிக்கு பிறகு தேர்தல் முடிவுகள் தொடர்பாக மேலும் பல்வேறு பரபரப்பான கருத்துக்களும் வெளியாக வாய்ப்புள்ளதால் அதன் பிறகு தேர்தல் களம் மேலும் சூடு பிடித்து அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாளில்தான் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது அன்று உதயசூரியன் மீண்டும் ஒளி வெள்ளத்தை பாய்ச்சுமா?

இரட்டை இலை துளிர் விட்டு மலருமா?

இல்லை விசில் சத்தம் காதை கிழிக்குமா? இவற்றுக்கான விடை மே 4-ந்தேதியே தெரியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com