

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் கடல் உணவுகள் பதப் படுத்தும் தொழிற்சாலையில் கடந்த மாதம் 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 18 பேர் பலியானார்கள்.
இதைத்தொடர்ந்து தொழிற்சாலையில் உள்ள அமோனியா வாயுவை அகற்றும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. 3 சேமிப்பு கிடங்கு மற்றும் குழாய், வால்வுகளில் தேங்கி இருந்த அமோனியா முழுவதும் அகற்றப்பட்டது.
நேற்று மாலை இந்த பணி முழுவதும் நிறைவு பெற்றது. இதுவரை சுமார் 6 டன் அமோனியா வாயு டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டு சென்னையில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து தொழிற்சாலை உள்ள பகுதியில் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் நீக்கப்பட்டது. தொழிற்சாலை எதிரே ஒரே வழியில் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்த நிலையில் இன்று காலை மீண்டும் இருவழிச்சாலையாக மாற்றப்பட்டது.
அமோனியா வாயு அகற்றப்பட்ட தொழிற்சாலையில் இன்று வருவாய்த்துறையினர், தொழில் துறையினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதாவும் ஆய்வு செய்ய உள்ளார்.
இதன்பின்னர் தொழிற்சாலைக்கு இன்று சீல் வைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில், நாளை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கன்னிகை பேர் கிராமத்தில் முன் எச்சரிக்கை பாதுகாப்பாக கடந்த 4 நாட்களாக மூடப்பட்டிருந்த பெட்ரோல் பங்க் இன்று காலை முதல் திறந்து வழக்கம்போல் செயல்பட்டது. இதனால் அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.