

அம்பத்தூர் தொகுதி மக்கள் தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்கவும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களை அறியவும் அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜி.பாலமுருகன் “நம்ம எம்.எல்.ஏ.” என்ற புதிய செயலியைத் தொடங்கியுள்ளார்.
இந்த செயலியின் மூலம் தொகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளைப் புகைப் படம் எடுத்தோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ மனுவாகப் பதிவு செய்ய முடியும்.
அவ்வாறு பொதுமக்கள் பதிவு செய்த மனுக்கள் மற்றும் கோரிக்கைகளின் தற்போதைய நிலை என்ன என்பதை இந்தச் செயலி மூலமாகவே அவர்கள் தொடர்ந்து கண்காணித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி, அம்பத்தூர் பகுதியில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் அரசுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தகவல்களையும் இந்தச் செயலி மூலம் மக்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ள எம்.எல்.ஏ. ஜி.பாலமுருகன், இதன் மூலம் மக்களுடன் எப்போதும் நேரடித் தொடர்பில் இருக்க முடியும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்து உள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-
அம்பத்தூர் மக்களுக்கு வணக்கம். இந்த செயலில் உங்கள் குறைகளை நீங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யலாம். இதுவெறும் செயலி மட்டுமல்ல உங்களுக்கும் எனக்கும் உண்டான நேரடி தொடர்பாக உள்ளது. கோரிக்கைகளை சரி செய்ய எங்களது குழு தயார் நிலையில் உள்ளது.
நீங்கள் அனுப்பும் குறை கள் உடனுக்குடன் 48 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டு எனது நேரடி கண்காணிப் பில் இந்த செயலி இருந்து வரும். உங்களுக்காக உழைக்க நான் இருக்கிறேன். நாம் இணைந்து இன்னும் சிறப்பாக அம்பத்தூரை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.