

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்காக தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையை பெறுவதற்காக முயற்சி மேற்கொண்டது. அதன்படி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாகவும் அக்கடிதத்தை த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, த.வெ.க. தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், நீலாங்கரையில் இருந்து புறப்பட்டு பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு வைத்து முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனைக்குப்பின், சி.வி.சண்முகம் தலைமையில் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்னும் சில நேரங்களில் த.வெ.க. தலைவர் விஜயை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக இது அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.