

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, புச்சிரெட்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(30). இவரது மனைவி தேன்மொழி(26). இவர்களது குழந்தை சுபஸ்ரீ. இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த குமார், காவியா, இலக்கியா உள்ளிட்ட மொத்தம் 8 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.
அதன்படி அவர்கள் அனைவரும் நேற்று இரவு திருத்தணியில் இருந்து ஈக்கோ கார் ஒன்றில் அனைவரும் ஊட்டி நோக்கிப் புறப்பட்டனர். காரை டிரைவர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார்.
இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே, சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்துகொண்டிருந்தது. அப்போது, ரோட்டின் ஓரத்தில் கியாஸ் லாரி ஒன்று நின்று கொண்டிருந்துது. அப்போது லாரியின் மீது கார் எதிர்பாராவிதமாக பயங்கரமாக மோதி நசுங்கியது.
விபத்தின் இடிபாடுகளில் சிக்கி விஜய் மற்றும் குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் மற்றும் பொதுமக்கள், காரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றவர்களை மீட்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி விஜய்யின் மனைவி தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
மேலும், இந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கார் டிரைவர் உட்பட 2 பேர் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி சுபஸ்ரீ, காவியா, இலக்கியா ஆகிய 3 பேர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா சென்ற போது கணவன்-மனைவி உள்பட 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.