‘வீ தி லீடர்ஸ் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்... 2031-ல் நிச்சயம் ஆட்சிமாற்றம் வரும்’ - அண்ணாமலை

19 லட்சம் உறுப்பினர்களில் 17% பேர் பெண்கள்.
‘2031-ல் நிச்சயம் ஆட்சிமாற்றம் வரும்... வீ தி லீடர்ஸ் இயக்கம் நிச்சயம் அரசியல் கட்சியாக மாறும்’ - அண்ணாமலை
Published on

‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாடு ‘போதையில்லா தமிழகம்’ என்ற பெயரில், இன்று கோவை பொள்ளாட்சியில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, நிச்சயம் இந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்றும், அதில் குழப்பம் வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,

பொள்ளாட்சியில் இன்று உங்களை பார்க்கும்போது எதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்தோமோ, 50% அதற்கான பாதையை நாம் தாண்டிவிட்டோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இயக்கம் தொடங்கி இன்றுடன் 38 நாட்கள் ஆகின்றன. இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் இணைந்துள்ளனர்.

நான் யாரையுமே தனியாக தொடர்புகொண்டு இதில் இணையுங்கள் என்று சொல்லவில்லை. இன்றும் எந்த அழைப்பும் இல்லாமல் இவ்வளவு பேர் இங்கு வந்துள்ளீர்கள். இதன்மூலம் தமிழ்நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள், நல்லது செய்ய தயாராக இருக்கிறார்கள், வாய்ப்புக்காக மட்டும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பொள்ளாட்சியின் வீ தி லீடர்ஸ் அமைப்பின் மாநாடு பறைசாற்றுகிறது.

நம் வேலையின்மூலம் மக்கள் வரவேண்டும். 50 லட்சம் எண்ணிக்கை இயக்கத்திற்கு வரும்போது, தமிழ்நாடு மக்கள் நம்மை அழைக்கிறார்கள் என்று பொருள். மக்கள் மனம்வைத்தால் 1 மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை வரும். ஆனால் அது தானாக நிகழவேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.

மாற்றத்திற்காக துணைநிற்கிறேன் என்றும் வரும்போது மட்டும்தான் நிரந்தரமாக ஒரு நல்ல சமூகத்தை கட்டமைக்க முடியும். அடுத்த ஆறு மாதத்திற்கான இலக்கு நம்மிடத்தில் இருக்கிறது. இம்மாதம் முழுவதும் போதைப்பொருள் விழிப்புணர்வுக்கான மாதம். அடுத்த மாதம் சுற்றுசூழலுக்கான மாதம்.

50 லட்சம் மரக்கன்றுகள் நம் இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நடவேண்டும். இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை சுத்தப்படுத்த வேண்டும். நதிநீரை சுத்தப்படுத்த வேண்டும். செப்டம்பர் மாதம் பெண்கள் பாதுகாப்பு பற்றியது. அடுத்தது குழந்தைகள் நலன். ஆறு மாதங்களும், ஆறு முக்கிய பிரச்னைகளை கையிலெடுத்து வீ தி லீடர்ஸ் அமைப்பு செயல்படவேண்டும்.

தனிமனிதனாக நீங்கள் செயலபட்டால் நிச்சயம் மாற்றம் நிகழும். மக்கள் தன்னெழுச்சியாக வருவார்கள் என்பதை இன்று பொள்ளாட்சி பார்த்துள்ளது. திருச்செந்தூர் வரும் 26ம் தேதி பார்க்கும். தமிழ்நாட்டின் பல பகுதிகளும் இதைபார்க்கும். நல்லவர்களுக்கான வாய்ப்பையும், மேடையையும் கொடுக்கவே வீ தி லீடர்ஸ் அமைப்பு உள்ளது.

இன்று 19 லட்சம் பேரில் 17% பெண்கள் இருக்கின்றனர். இது நமது முதல் வெற்றி. ஆனால் இது 50ஆக வேண்டும். அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக வெறும் 5% மட்டுமே பெண்கள் இருப்பர். அதுபோல 14% 18 முதல் 25 வயது உடையவர்கள். 26 முதல் 39 வயதுவரை 40% பேர் இருக்கின்றனர். இது ஒரு இளம் அமைப்பு. மொத்தமாக 54% பேர் 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்.

இளைஞர்களின் குரல்களை நாம் கேட்கவேண்டும். இவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இவர்கள் 2026-ல் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 2031-ல் மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தத்தான் போகிறார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் அவர்கள் படித்தவர்கள், நேர்மையானவர்கள், சமுதாயத்திற்காக தங்களை முழுவதும் அர்ப்பணித்தவர்கள். இன்னும் 5 ஆண்டுகள் நமக்கு உள்ளது. ஒவ்வொரு சமுதாய பணியையும் நாம் செய்ய செய்ய மக்கள் நம்மிடம் வருவார்கள்.”என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com