கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் கண்காணிக்க 45 மருத்துவ குழுக்கள்- கலெக்டர் அறிவிப்பு

பண்ணை வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் கண்காணிக்க 45 மருத்துவ குழுக்கள்- கலெக்டர் அறிவிப்பு
Published on

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் கோழிப்பண்ணையாளர்களுக்கான பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:-

ராசிபுரம் தாலுகா ஆர்.பட்டணம் கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் திடீரென கோழிகள் இறந்தன. அதைத்தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு முறைகளை தீவிரமாக கடைபிடிக்கவேண்டும்.

வனப்பறவைகள் உள்ளே நுழையாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வாகனங்கள் பண்ணையில் நுழையும் பொழுது கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கவேண்டும். பண்ணை ஆட்கள் கிருமி நாசினி நிரம்பிய தொட்டியில் கால்களை நனைத்த பிறகே வளாகத்திற்குள் செல்லவேண்டும். பண்ணை வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

மேலும் கோழிப்பண்னைகளில் கோடைகால பராமரிப்பு முறைகள் முறையாக பின்பற்றி கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும். கோழிப்பண்ணைகளில் கோழிகள் இறப்பை கண்காணிக்க மாவட்ட அளவில் 45 கால்நடை மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகள் மற்றும் நீர் நிலைகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இது தவிர பண்ணைகளில் அசாதாரணமாக கோழிகள் இறப்பு ஏதும் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவர்களிடம் தகவல் தெரிவிக்கவேண்டும். ராசிபுரம், வெண்ணந்தூர் மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றியங்களில் உள்ள கோழிப்பண்ணைகளை தினமும் கண்காணிக்க கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதார துறை, உள்ளாட்சி துறை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) அருள் பிரகாஷ்ராஜ், உதவி இயக்குநர்கள் விஜயகுமார், விஜயமூர்த்தி, அலுவலர்கள், மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com