

அலங்காநல்லூர்:
தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 350-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி அலங்காநல்லூரில் நடைபெற்றது.
தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு பி.பி.டி கவச உடை, முககவசம், கையுறை, சானிடேஷர், உதவித் தொகை உள்ளிட்டவைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
அமைச்சராக பொறுப்பேற்ற மறுநாள் முதலே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரவு, பகல் பாராமல் மக்களை காப்பாற்றுவதே ஒரே லட்சியம் என செயல்பட்டு வருகிறோம். நமது முதல்வர் அவர்கள் துரிதமாக செயல்பட்டு தமிழகம் மட்டு மல்லாமல் வேறு மாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜன் பெற்று மக்களை காத்து வருகிறார். முதல் அலையில் பெருமளவு பாதிப்பு இல்லை.
ஆனால் தற்போது பாதிப்பு அதிகமான நேரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உயிரை பணயம் வைத்து காத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களை தமிழக அரசு கவுரவித்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் போதிய இருக்கை வசதி இல்லை என்றதும் உடனே தோப்பூரில் 250க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் கூடிய படுக்கையை ஏற்படுத்தி தந்துள்ளோம்.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. நகர் புறத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் கிராம புறங்களில் பொது மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் பரவல் அதிகமாக உள்ளது.
எனவே தான் மகளிர் சுய உதவி குழுக்களை களத்தில் இறக்கி தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க வேண்டும் என பணியமர்த்தியுள்ளோம்.
மருத்துவர் செவிலியர்களோடு இணைந்து சிறப்பாக பணியாற்றி வரும் மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவிக்கும் வகையிலே இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழகத்திலே மதுரையில் தான் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது என்பதை பெருமிதத்துடன் கூறி கொள்கிறேன். உங்களின் இந்தபணியை ஊக்குவிக்கும் வகையில் இந்த கடனுதவி வழங்குகின்றோம்.
இவ்வாறு அவர் பேசினார்.