

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.
இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமிஷன் அந்த சின்னத்தை முடக்கியது.
பல்வேறு விசாரணைக்கு பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கே என்று தீர்ப்பளித்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என்று கூறி தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.