search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக, அதிமுக ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை நடக்கிறது- திருமாவளவன் குற்றச்சாட்டு
    X

    திமுக, அதிமுக ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை நடக்கிறது- திருமாவளவன் குற்றச்சாட்டு

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.
    • எங்களின் தலையீட்டால் தான் இந்த வழக்கை முதலமைச்சர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றினார்.

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கும் போது தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்கின்றன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

    வேங்கைவயல் பிரச்சினையில் 5 ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்தினோம். தலித்துகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல் நடக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. சமீபத்தில் ஓசூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

    ஆளும் தி.மு.க. கட்சிக்கு எதிராக தென் மாவட்டங்களில் தலித்துகள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து மதுரை, திருநெல்வேலியில் போராட்டங்களை நடத்தியுள்ளோம். தி.மு.க.வுக்கு எதிராக விடுதலை சிறுத்தை போராட்டம் நடத்தவில்லை என்று கூறுவது எங்கள் மீதான அரசியல் வெறுப்பை காட்டுகிறது.

    தி.மு.க., அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கின்ற போது தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றன. தலித்துகள் மீதான தாக்குதலுக்கு ஆளுங்கட்சி மட்டும் பொறுப்பேற்க முடியாது.

    சமீபத்தில் சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தை உயர்மட்ட குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை விமர்சிக்கும் வகையில் 2 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

    தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் "சனாதன சக்திகளால் ஆதி திராவிடர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சாதியக் கொடுமைகளை கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


    பஞ்சமி நிலங்களை தலித்துகளுக்கு வழங்கவும் எஸ்.சி.-எஸ்.டி. துணை திட்ட சட்டங்களை சட்ட சபையில் நிறைவேற்றவும் சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    நகர்புறங்களில் மட்டுமின்றி கிராமப் பகுதியிலும் போதைப் பொருள் பெருக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம்.

    வேங்கைவயல் விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க விரும்புகிறார். டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும் போலீசார் கூறுவதால் தாமதம் ஏற்படுகிறது. எங்களின் தலையீட்டால் தான் இந்த வழக்கை முதலமைச்சர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றினார்.

    இதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார். ஆனால் போலீசார் கைது செய்வதை தாமதப்படுத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடரும் பட்சத்தில், திராவிட மாடல், சமூக நீதி என்று பேசும் தி.மு.க.வுடன் கூட்டணி வலுவிழந்து விடுமா? என்ற கேள்விக்கு, தலித்துகளுக்கான நீதி விஷயத்தில் தி.மு.க.வும் விடுதலை சிறுத்தையும் ஒரே பக்கம் தான்.

    ஆனால் 'சிஸ்டம்' அதை அனுமதிக்கவில்லை. நாங்கள் அதை நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ இல்லை என்று திருமாவளவன் பதிலளித்தார்.

    பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். ஒரு பிரச்சினைக்கு அப்பால் ஒரு வருக்கொருவர் இணைந்து செயல்பட வேண்டும். விடுதலை சிறுத்தை தனது நிலைப்பாட்டை நீர்த்து போகச் செய்வது விட்டதோ, தலித்துகளுக்காக போராடும் தன்மையை இழந்து விட்டோமோ என்று அர்த்தமில்லை என்று விளக்கமளித்தார் திருமாவளவன்.

    Next Story
    ×