கொலை பழி சுமத்தியவர்கள் என்பதை மறந்து திமுகவுக்கு ஆதரவு தந்தேன்- வைகோ ஆவேசம்

நாங்கள் அவமானப்படுத்தப்பட்ட போது தாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தேன். அமைதியாக இருந்ததற்கு கூட்டணி தர்மம்தான் காரணம்.
வைகோ
Published on

புதுச்சேரியில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க விழாவில் பங்கேற்க வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

நேர்மையான ஆட்சி

முத்தமிழ் போற்றும் 3 காண்டங்கள் என்ற தலைப்பில் தனித்தமிழ் இயக்கவிழாவில் பங்கேற்க வந்துள்ளேன். பிரெஞ்சு நாடு இன்றும் புதுச்சேரியை மதிக்கிறது. தமிழுக்கு புதுச்சேரி மகுடம் சூட்டியது. தமிழகத்தில் இதுவரை தலைவிரித்தாடிய ஊழல் ஒழிக்கப்பட்டு நேர்மையான ஆட்சியை முதல்வர் விஜய் நடத்துகிறார்.

அவர் கொற்றம் வாழ்க. இப்படியே கொற்றம் நீடிக்கும். பெருச்சாளி ஊழல்தான் திமுக செய்தது. இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளிலும் நடப்பதுதான் இங்கும் நடக்கிறது. நேதாஜி காங்கிரசை வளர்த்தார். அவர் பதவியை காங்கிரஸ் பறித்தது. கட்சி ஆரம்பித்து விமர்சித்தார். திலகர், வ.உ.சிதம்பரனார் ஆகியோரும் காங்கிரசை வளர்த்து விமர்சித்துள்ளனர். இது வழக்கமான ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Q

கரூர் விவகாரத்தில் மனசாட்சி இல்லாமல் ஓடி வந்தவர் என விஜயை விமர்சித்தீர்களே?

A

அன்று போகவில்லை சொன்னேன்- இன்று போகிறார் மனசாட்சி இருக்கிறது என்று சொல்கிறேன்.

Q

திமுகவிலிருந்து மதிமுக விலகியதால் நிம்மதியாக இருக்கிறது என எம்பி துரை வைகோ சொல்லி உள்ளாரே?

A

லட்சக்கணக்கான தொண்டர்கள் எப்படி நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்களோ அந்த நிம்மதியைத்தான் திருச்சி எம்பியும் வெளிப்படுத்தி உள்ளார்.

Q

இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஸ்டாலின், செய்யாததையும் செய்துள்ளார் என தெரிவித்துள்ளீர்களே?

A

கூட்டணி இருந்த காலத்தில் நல்ல காரியங்கள் நடந்த போது நான் பாராட்டினேன். அதே நேரத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்ட போது தாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தேன். அமைதியாக இருந்ததற்கு கூட்டணி தர்மம்தான் காரணம். என் மீது கொலை பழி சுமத்தி வீதியிலே தூக்கி எறிந்தவர்கள் என்பதை மறந்து ஆதரவு தந்தேன்.

Q

அதிக முறை உங்களை எம்பியாக வைத்து அழகு பார்த்தது திமுகதானே?

A

அதைவிட லட்சம் வரை அண்ணாவையும், இயக்கத்தையும் தூக்கி பாராளுமன்றத்தில் நிறுத்தியவன் நான்.

Q

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளாரே?

A

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

Q

தமிழக முதலமைச்சர் பாஜவை விமர்சிப்பதில்லையே?

A

100க்கு 100 எதிர்ப்பு இருக்கிறது. அவர் பாஜகவின் காஷ்மீர் கொள்கை, இந்துத்வா கொள்கையை ஆதரிக்கவில்லை. மதச்சார்பின்மை, சமூகநீதியை ஆதரிக்கிறார். ஜனநாயகத்தை ஆதரிக்கிறார், அவர் தனித்து நிற்கிறார்.

இவ்வாறு வைகோ பதிலளித்தார்.

நிருபர்கள் தொடர்ந்து திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்தது குறித்து கேள்விகளை எழுப்பினர். இதனால் கோபமான வைகோ, சில நாட்கள் முன்பு நடந்த சம்பவம் போல இங்கும் நடக்க வேண்டும் என எண்ணினால் நீங்கள் ஏமாந்துபோவீர்கள் என கூறினார்.

அப்போது புதுச்சேரி மாநில மதிமுக பொறுப்பாளர் ஹேமா பாண்டுரங்கன், ஒரு நிருபர் ஒரு கேள்வி கேளுங்கள், தொடர்ந்து நீங்களே கேள்வி கேட்காதீர்கள் எனக்கூறி நிருபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com