

தமிழகம், புதுவையில் தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் சென்னை அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.
புதுவையில் வருகிற 9-ந்தேதி தேர்தல் நடைபெறுவதால் காலையில் நேர்காணல் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுவை பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., புதுவை மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. தொகுதிவாரியாக விண்ணப்பித்தவர்கள் அழைக்கப்பட்டனர்.
புதுவையில் 104, காரைக்காலில் 16 பேர் என மொத்தம் 120 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் விண்ணப்பித்த அனைவரையும் ஒட்டுமொத்தமாக அழைத்து பேசினர். அப்போது புதுவை மாநில அரசியல் நிலவரம், காங்கிரஸ் கட்சியின் போக்கு, தி.மு.க. தனித்து போட்டியிட்டால் எப்படி இருக்கும்? ஏன் தி.மு.க. ஆட்சியை புதுவையில் அமைக்கவில்லை? என்பது குறித்து கேட்டறிந்தனர்.
பெரும்பாலான நிர்வாகிகள், தனித்து போட்டியிடலாம் என விருப்பம் தெரிவித்துள்ளனர். அதோடு, காங்கிரசார் தி.மு.க. தொகுதிகளில் முறையாக வேலை செய்வதில்லை. அவர்களில் பலர் என்.ஆர்.காங்கிரசுக்கு தேர்தல் பணியாற்றுவதாக புகார் செய்தனர். தொடர்ந்து நேர்காணல் நடந்து வருகிறது. இன்று மாலை புதுவை காங்கிரசாரை சென்னைக்கு அழைத்து பேசவும் தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது.
இதில் சமரச முடிவு ஏற்பட்டால், கூட்டணி, தொகுதி பங்கீடு தொடரும். இல்லாவிட்டால் திமுக, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், யூனியன் முஸ்லீம்லீக், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் இணைந்து தனியாக தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது.