புதுவையில் தவெக கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும்- நாராயணசாமி

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு பொதுப்பணித்துறை, பத்திரப்பதிவுத்துறை என தமிழகத்தில் பல துறைகளில் ஊழல் குறைந்துள்ளது.
நாராயணசாமி
Published on

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை மோடி திட்டமாக மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு ரூ. 15 ஆயிரம் கோடி மத்திய அரசு புதுச்சேரிக்கு தந்துள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

மாய பிம்பம்

முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய நிதி அமைச்சரிடம் ரூ. 2 ஆயிரம் கோடி சிறப்பு நிதி தர கோரினார். சிறப்பு நிதியாக தராமல் கடனாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கீடு செய்தார்.

அதனால் ரூ. 15 ஆயிரம் கோடியை புதுச்சேரிக்கு மத்திய அரசு தந்தது இல்லை. அவர் மத்திய அரசு ரூ. 15 ஆயிரம் கோடி ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரிக்கு தந்ததை மத்திய அமைச்சர் முருகன் நிருபிக்க முடியுமா என சவால் விடுகிறேன். மத்திய அரசு நிதி இல்லாததால் திட்டம் முடங்குவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

நிதியை மத்திய அரசு வாரி வழங்கியதாக மாய பிம்பத்தை முருகன் உருவாக்கியுள்ளார். புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு இலாக்கா தராததால் நிர்வாகம் ஸ்தமித்து சோதனை அரசாகவுள்ளது.

தமிழக முதல்வர் விஜய், புதுச்சேரி முதல்வருக்கு நெருக்கமானவர். தமிழக அமைச்சர் ஆனந்தும் அவரை அடிக்கடி சந்திக்கிறார். தமிழகத்தில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது ஊழலுக்கு இடமில்லை என மக்கள் முன்பு அறிவித்தார்.

அதேபோல் வரும் 17ல் அமைச்சர்கள் பதவியேற்பில் முதல்வர் ரங்கசாமியும் ஆட்சியில் ஊழல் நடைபெறாது என பகிரங்கமாக அறிவிப்பாரா? அவரை சுற்றி வரும் ஆறு புரோக்கர்களை வெளியே அனுப்புவாரா?

ஊழல் குறைந்துள்ளது

பதவியேற்பு விழாவில் பேசாவிட்டாலும் காந்தி சிலை முன்பு முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூடி ஆட்சியில் ஊழல் நடைபெறாது என சபதம் எடுக்க தயாரா? புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு பொதுப்பணித்துறை, பத்திரப்பதிவுத்துறை என தமிழகத்தில் பல துறைகளில் ஊழல் குறைந்துள்ளது.

விஜய்க்கு நெருக்கமான ரங்கசாமி இதை செய்ய தயாரா- இதில் அவருக்கு ஒத்துழைப்பு தர தயார். தமிழகத்தில் 717 மதுபானக் கூடங்களை மூட விஜய் உத்தரவிட்டு மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 900 பார்கள் உள்ளன. கோவில், மசூதி, சர்ச், பள்ளி, குடியிருப்பையொட்டியுள்ள பார்கள், ரெஸ்டோபார்கள் மூட முதல்வர் ரங்கசாமி தயாரா அதை உண்மையில் செய்தால் விஜய் நண்பர் என ஏற்கலாம்.

மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையை செய்யும் தனியார் நிறுவனம் மாதம் ஒன்றரை லட்சம் மதுபான பாட்டில் தொகுப்புகளை விற்கின்றனர். கலால்துறைக்கு தந்த எழுத்துப்பூர்வ விலையை விட கூடுதலாக விற்பதில் ஐந்து ஆண்டுகளில் பல நூறு கோடி ஊழல் நடந்துள்ளது.

தமிழகத்தில் ஊழல் குறைந்துள்ளது. அப்படியெனில் கடந்த திமுக ஆட்சியில் ஊழல் அதிகமாக இருந்ததா என்று கேட்கிறீர்கள் அது எனக்கு தெரியாது.

தவெகவுடன் தமிழகத்தில் தான் காங்கிரஸ் இணைந்து செயல்படுகிறது, புதுவையில் தவெகவுடன் கூட்டணி குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com