

அசாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் அதி கனமழை பெய்து வருவதால் குருங் குமே மாவட்டத்தில் உள்ள குமே ஆற்றையொட்டிய பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்கு வெள்ளப்பெருக்கால் பார்சி-பார்லோ மற்றும் தாமின் ஆகிய பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் போக்குவரத்துக்கு பிரதானமாக விளங்கிய இரண்டு 3 பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
பார்சி பார்லோ பகுதியில் இரண்டு வீடுகள், ஒரு பள்ளி, 3 தேவாலயங்கள் வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயப் பயிர்களும் நாசமாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை ராணுவப் படை, எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் போலீசார் இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அருணாச்சல பிரதேசத்தின் மற்ற மாவட்டங்களிலும் மழை காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பக்கே கேசாங் மாவட்டம் பக்ரோ கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
அண்டை மாநிலமான அசாமில், சிவசாகர், லக்கிம்பூர், தர்ராங், சோனித்பூர், தேமாஜி மற்றும் ஜோர்ஹத் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, 61 கிராமங்களை சேர்ந்த 9,616 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தலைநகர் கௌஹாத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களிலும் வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.