

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் 'உல்லாஸ்' (சமூகத்தில் அனைவருக்கும் வாழ்நாள் கற்றலைப் புரிந்துகொள்ளுதல்) திட்டத்தின் கீழ், உத்தரகாண்ட் மாநிலம் நேற்று (புதன்கிழமை) நாட்டின் ஆறாவது முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உருவெடுத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் நிர்ணயிக்கப்பட்ட வயது வந்தோர் எழுத்தறிவு அளவுகோல்களைப் பூர்த்தி செய்ததன் மூலம், மாநிலம் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆளுநர் ஒப்புதல்:
இதைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் ஆளுநர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங், மாநிலத்தை முழுமையான எழுத்தறிவு பெற்றதாக அறிவிக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தார்.
உத்தரகாண்டிற்கு முன்பாகவே, மிசோரம், கோவா, திரிபுரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்கள் முழுமையான எழுத்தறிவு நிலையை அடைந்திருந்தன.
தீவிரப் பங்களிப்பு:
முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இந்த சாதனையை மாநிலத்தின் ஒரு 'மைல்கல்' என்று தெரிவித்தார். அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுடன், மக்களின் தீவிர பங்களிப்பும் இந்த சாதனையை அடைவதில் முக்கிய பங்கு வகித்தது என்று அவர் கூறினார்.
மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த தாமி, "இத்தகைய கூட்டு முயற்சிகள், 2047-ஆம் ஆண்டுக்குள் 'விக்ஷித் பாரத்' என்ற இலக்கை அடைய உதவும்.
மேலும், டிஜிட்டல் கல்வி, நிதி கல்வி, தொடர் கல்வி மற்றும் வாழ்க்கைத்திறன்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதிசெய்ய, அரசு முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்படும்" என்று கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கும் முன்மொழிவுக்கு, மாநில அமைச்சரவை ஜூன் 19 அன்று ஒப்புதல் அளித்திருந்தது.