பாஜகவில் சேர்ந்த சில மணிநேரத்தில் மாநிலங்களவை தேர்தலில் சீட்.. திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.கள் குஷி

ஜூலை 24ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலில் மூவரும் போட்டி.
திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.கள்
திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.கள்
Published on

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 3 முன்னாள் எம்பிக்களுக்கு மேற்கு வங்க மாநிலங்களவை இடைத்தேர்தலில் சீட் வழங்கப்பட்டுள்ளது.

விலகல்

சமீபத்தில் நடந்த மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது.

இதில் மம்தா பானர்ஜிக்கு எதிராக ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் 61 எம்.எல்.ஏ.க்கள் மேற்குவங்க சட்டசபையில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் ரிதப்ரதா பானர்ஜி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார்.

மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகினர். அவர்கள் திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை எம்.பி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர்.

இவர்களைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரகாஷ் சிக் பரேக் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ந்து எம்.பி.க்கள் விலகியது மம்தா பானர்ஜிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மாநிலங்களவை முன்னாள் எம்.பி.க்கள் கொல்கத்தாவில் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள பாஜக மாநிலத் தலைமையகத்தில், மாநிலத் தலைவர் சாமிக்க பட்டாச்சார்யா முன்னிலையில் இந்த மூன்று முக்கியத் தலைவர்களும் தங்களை முறைப்படி பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

சீட்

சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிக் பரைக் ஆகிய மூவரும் பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களிலேயே, அவர்களுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.

ஜூலை 24ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலில் இந்த மூவரும் மேற்கு வங்கத்தில் இருந்து பாஜக வேட்பாளர்களாகப் போட்டியிடுவார்கள் எனப் பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மீண்டும்

முன்னதாக, இவர்கள் மூவரும் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி தங்களது எம்பி பதவிகளை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலிப் இடங்களுக்குத்தான் தேர்தல் ஆணையம் தற்போது இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.

இப்போது அதே இடங்களுக்குப் பாஜக சார்பில் இவர்கள் களம் இறக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பாஜக சின்னத்தில் நாடாளுமன்றத்தின் மேலவைக்குச் செல்ல இவர்கள் தயாராகி வருகின்றனர்.

விதிவிலக்கு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு பாஜகவின் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக முன்பு கூறப்பட்ட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது குறித்துப் பேசிய சாமிக்க பட்டாச்சார்யா, "டிஎம்சி தலைவர்களைச் சேர்க்க மாட்டோம் என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்.

ஆனால், ஊழலில் ஈடுபடாத, மக்களை ஒடுக்காத, வேலைகளை விற்றுப் பணம் சம்பாதிக்காத மற்றும் மக்களின் உரிமைகளைப் பறிக்காத தூய்மையான தலைவர்கள், டிஎம்சிக்கு எதிரான எங்களது போராட்டத்தில் எப்போதும் வரவேற்கத்தக்கவர்கள். இது விதிவிலக்கான ஒரு முடிவு" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com