‘ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து திரியும் நாள் வெகு தொலைவில் இல்லை’ - சதுப்பு நிலக்காடுகள் அழிப்பு குறித்து மும்பை உயர் நீதிமன்றம் காட்டம்

132 கிலோவாட் மின் பரிமாற்றப் பாதை அமைப்பதற்காக 847 சதுப்புநில மரங்களை வெட்ட அனுமதி கோரி மகாராஷ்டிர மாநிலம் மனுத்தாக்கல்.
‘ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து திரியும் நாள் வெகு தொலைவில் இல்லை’ - சதுப்பு நிலக்காடுகள் அழிப்பு குறித்து மும்பை உயர் நீதிமன்றம் காட்டம்
Published on

‘மக்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆக்ஸிஜன் சிலிண்டரை தூக்கிக்கொண்டு செல்லும் நாள் இன்னும் வெகுதொலைவில் இல்லை’ என இந்தியாவில் சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு குறைந்துவருவது குறித்து மும்பை உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக, 847 சதுப்புநில மரங்களை வெட்ட அனுமதி கோரி மகாராஷ்டிர மாநில மின்சார பரிமாற்ற நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, ​​பொறுப்பு தலைமை நீதிபதி ரவீந்திர குகே மற்றும் நீதிபதி கௌதம் அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தைத் தெரிவித்தது.

“ஏற்கனவே மும்பையில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக உள்ளது. மக்கள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற, மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தங்கள் முதுகில் சுமந்து செல்லும் நாள் தொலைவில் இல்லை.” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் மிலிந்த் சாத்தே, வேறு இடங்களில் மரங்களை நட அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

இந்த செயலையும் விமர்சித்த நீதிமன்றம், ‘பிரச்சனை என்னவென்றால், நீங்கள் யாரும் மீண்டும் மரங்களையோ, செடிகளையோ நடுவதில்லை. தோற்றத்திற்காக நடும் செடிகள் வாடத் தொடங்கிவிடுகின்றன. ஏதோ ஒன்றை நட்டுவிட்டீர்கள் என்ற ஒரு தோற்றத்தை மட்டுமே உருவாக்குகிறீர்கள். நட்ட பிறகு, அது உயிருடன் இருக்கிறதா என்றுக்கூட திரும்பிப் பார்ப்பதில்லை.” என தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், மரங்களை வேறு எங்கும் நடாமல், அதே பகுதியில் உள்ள சீரழிந்த காட்டு நிலங்களை கண்டறிந்து காடுகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்குச் சற்று கால அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் மாற்றுப் பாதைகளை ஆய்வு செய்த பிறகே, காடுகளுக்குக் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த வழித்தடம் தேர்வு செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அக்டோபர் மாதம் பிரதமர் புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதால், மின் பரிமாற்ற வழித்தடம் அவசரமாகத் தேவைப்படுகிறது என்றும் அரசு சுட்டிக்காட்டியது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், திட்டத்திற்கு தடை விதிக்கவில்லை என்றாலும், வெட்டப்படும் மரங்களை ஈடுசெய்யும் காடுகளை வளர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, இந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

2018-ஆம் ஆண்டின் மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, நீதிமன்ற அனுமதியின்றி சதுப்புநிலக் காடுகளை அழிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com