பார்லரில் டாட்டூ குத்திய பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று - அதிர்ச்சி சம்பவம்

முறையாக ஸ்டெர்லைஸ் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்தியது காரணமாக இருக்கலாம்.
டாட்டூ
டாட்டூ
Published on

டெல்லியில் உள்ள ஒரு பார்லரில் டாட்டூ குத்திய சில நாட்களிலேயே பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 32 வயதுப் பெண் பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று காரணமாக கான்பூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அறிகுறிகளை அறிந்து மருத்துவர்கள் அவருக்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ்-பி பரிசோதனைகளை மேற்கொள்ளப் பரிந்துரைத்தனர்.

அவருக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் என பரிசோதனை முடிவு வந்துள்ளது. பெண்ணுக்கு தற்போது அரசு மருத்துவமனையில் இலவச ஆண்டி ரெட்ரோவைரல் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

டாட்டூ ஊசியால் வந்த வினை

இது குறித்து மருத்துவக் கல்லூரியின் தோல் மருத்துவப் பிரிவு இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்வேதாங்க் கூறுகையில்,

"பாதிக்கப்பட்ட பெண் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள ஒரு டாட்டூ பார்லருக்கு சென்று பச்சை குத்தியுள்ளார்.

அங்கு முறையாக ஸ்டெர்லைஸ் செய்யப்படாத அல்லது ஏற்கனவே மற்றொருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளை இவருக்குப் பயன்படுத்தியதே இந்த எச்.ஐ.வி தொற்றுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என நம்புகிறோம்.

எச்.ஐ.வியை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், முறையான தொடர் சிகிச்சையின் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும். இதற்காக நோயாளி வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்

மருத்துவர்கள் எச்சரிக்கை

முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத, தரம் குறைந்த டாட்டூ நிலையங்களில் பச்சை குத்திக் கொள்வது எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ்-பி போன்ற ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், டாட்டூ குத்தப் பயன்படுத்தப்படும் மைகள் தோலில் கடுமையான ஒவ்வாமை போன்ற ஆபத்தான தோல் நோய்களை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, டாட்டூக்களில் பயன்படுத்தப்படும் சிகப்பு மற்றும் பச்சை நிற மைகள் தான் தோலில் அரிப்பு, தடிப்பு மற்றும் கடுமையான அலர்ஜிகளை மிக எளிதாக உருவாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com