search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    15-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு: தலைமை தேர்தல் ஆணையம் இறுதி கட்ட ஏற்பாடு
    X

    15-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு: தலைமை தேர்தல் ஆணையம் இறுதி கட்ட ஏற்பாடு

    • பெங்களூரு-விஜயவாடா இடையே ரூ.14 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ள துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    • தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதால் தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இதையொட்டி பிரதமர் மோடி மாநில வாரியாக சுற்றுப்பயணம் செய்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். மத்திய அரசின் அமைச்சகங்கள் மூலம் தொடங்கப்படும் திட்டப்பணிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மத்திய அமைச்சகத்தின் திட்டங்களின் தொடக்க விழாக்கள், அடிக்கல் விழாக்களை வருகிற 13-ந்தேதிக்குள் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் 13-ந்தேதிக்குள் தனது சுற்றுப்பயணங்களை நிறைவு செய்ய உள்ளார்.

    இன்று (சனிக்கிழமை) 4 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி பேசுகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) விமான நிலையங்கள் தொடர்பான விழாக்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    திங்கட்கிழமை (11-ந்தேதி) மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாடு முழுவதும் 100 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த 100 நெடுஞ்சாலை திட்டங்களும் சுமார் ரூ. 1 லட்சம் கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளன.

    மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பிரதமர் பொக்ரானுக்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அன்றே நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதில் சென்னை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் 2-வது சேவையும் அடங்கும்.

    அதோடு பெங்களூரு-விஜயவாடா இடையே ரூ.14 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ள துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அன்று மாலை டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் 2-வது ஆட்சி காலத்தின் கடைசி மந்திரி சபை கூட்டமாக இது கருதப்படுகிறது. அதில் பல்வேறு திட்ட அறிவிப்புகள் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    கூட்டம் முடிந்ததும் பல்வேறு புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அந்த மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை வரையறுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. வருகிற 12, 13-ந் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்கிறது. அங்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்கிறார்கள்.

    இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று மத்திய உள்துறை அமைச்சக செயலாளரை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த 3,400 கம்பெனி மத்திய படையினரை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    வருகிற 12-ந்தேதிக்குள் மத்திய பாதுகாப்பு படையினரை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 13-ந்தேதிக்குள் அனைத்து பூர்வாங்க பணிகளும் முடியும் என்று தெரிகிறது.

    அதன் பிறகு உடனடியாக தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. 14-ந்தேதி (வியாழக்கிழமை) தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.

    அதில் தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்படும். நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படும்.

    தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் தேதி அட்டவணையை 15-ந்தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக டெல்லியில் நிருபர்கள் கூட்டத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×