

ஒரு பெண்ணின் மார்பை பிடித்து கசக்குவதோ, அவள் அணிந்திருக்கும் கீழ் ஆடையை கழற்ற முயல்வதோ பாலியல் வன்கொடுமை முயற்சியாகாது என பாட்னா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஒரு உயர் நீதிமன்றம், இத்தகைய செயல்கள் அப்பெண்ணை மானப்பங்கப்படுத்துதல் என்ற செயலின்கீழ் வருமே தவிர, கற்பழிப்பு முயற்சியில் வராது என தீர்ப்பளித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு பெண் ஒருவர் தனது தந்தையுடன் புகைப்படம் எடுக்க ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார். புகைப்படம் எடுத்தப்பின் எப்படி இருக்கிறது என்பதை கணினியில் பார்க்க முயன்றபோது, பெண்ணின் தந்தையை வெளியே இருக்குமாறு குற்றம் சாட்டப்பட்ட புகைப்பட ஸ்டுடியோவின் உரிமையாளர் ஹிமான்ஷு குமார் கூறியுள்ளார்.
இதனையடுத்து பெண்ணின் தந்தை கடைக்கு வெளியே நிற்க, அங்கிருந்த அறையின் கதைவை மூடி, அப்பெண்ணின் ஆடைகளைக் கலைந்து, கீழ் அணிந்திருந்த ஆடையையும் கழற்ற முயன்றுள்ளார்.
மேலும் அப்பெண்ணின் மார்பகங்களையும் பிடித்து அழுத்தியுள்ளார். இதனால் அப்பெண் கூச்சலிட அவரது தந்தையும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடிவர, ஹிமான்ஷு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இந்த வழக்கில் 2013ம் ஆண்டு ஹிமான்ஷுவை குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது விசாரணை நீதிமன்றம்.
இந்த தண்டனையை எதிர்த்து ஹிமான்ஷு மேல்முறையீடு செய்ய, மருத்துரீதியான ஆதராங்கள் இல்லை எனக்கூறி நீதிபதி பூர்ணேந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து, தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் பெண்ணின் உடலுக்குள் பாலியல் ரீதியான ஊடுருவல் (Penetration) நடந்ததற்கோ அல்லது அதற்கான தெளிவான மருத்துவ ஆதாரங்களோ இல்லை என இந்த தண்டனை குறைப்புக்கு காரணம் தெரிவித்துள்ளார் நீதிபதி பூர்ணேந்து சிங்.
கற்பழிப்பு முயற்சி எனக் கருதுவதற்கு, குற்றம் தயாரிப்பு நிலையைத் தாண்டி, குற்றத்தைப் பூர்த்தி செய்யும் இறுதி நிலைக்குச் சென்றதற்கான உறுதியான சான்றுகள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை மற்றும் பெண்ணின் கண்ணியத்தைக் குலைப்பவை என்பதால், அது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-இன் கீழ் (மானபங்கம்) மட்டுமே வரும் எனக் கூறி,
அதாவது பாலியல் குற்றங்களில் 'மானபங்கம்' மற்றும் 'கற்பழிப்பு முயற்சி' ஆகியவற்றிற்கு இடையேயான சட்டபூர்வமான வேறுபாடுகளை குறிப்பிட்டு,
அவர் ஏற்கனவே அனுபவித்த சிறைக்காலத்தைக் கணக்கில் கொண்டு முதன்மைக் குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்தது.