

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மாணவர்களின் மரணங்களுக்கு நீதி கேட்டு டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 22 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், நேற்று டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சஃப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி அவரது மனைவி டாக்டர் கீதாஞ்சலி ஜே.ஆங்மோ டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,
சஃப்தர்ஜங் மருத்துவமனை அதிகாரிகள், சோனம் வாங்சுக்கின் ரத்தத்தில் பொட்டாசியம் அளவு 2.9 ஆகக் குறைந்துவிட்டதாகவும், இது உயிருக்கு ஆபத்தான நிலை என்றும் எங்களிடம் கூறினர். ஆனால், அவர்கள் வெளியிட்ட பொது சுகாதார அறிக்கையில் இந்த எண்ணைக் குறிப்பிடாமல், "பொட்டாசியம் அளவு குறைந்து வருகிறது" என்று மழுப்பலாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மருத்துவமனை அதிகாரிகளின் கூற்றின் மீது சந்தேகம் அடைந்து, 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரத்த மாதிரியைப் பெற்று வெளியில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் சோதனை செய்தோம். அதில் பொட்டாசியம் அளவு 3.5 என்ற சாதாரண எல்லையிலேயே உள்ளது தெரியவந்தது.
மருத்துவமனையில் அவர் தங்கியிருக்கும் தளத்தில் 30 போலீசாரும், வளாகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். எங்களை அவரைப் பார்க்க அனுமதிப்பதில்லை. இது மருத்துவச் சிகிச்சை அல்ல, 'சட்டவிரோதக் காவல்' ஆகும்.
எனது கணவருக்கு எனது சம்மதம் இன்றியோ அல்லது அவரது தனிப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனையின்றியோ எந்தவொரு மருந்தையோ அல்லது குளுக்கோஸையோ செலுத்தக்கூடாது என்று அதிகாரிகளிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளேன்.
மறுபுறம், சோனம் வாங்சுக்கை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய அரசுத் தரப்பும் சஃப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகமும் மறுப்பு தெரிவித்துள்ளன. சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணித்து, தேவைப்பட்டால் மருத்துவத் தலையீடு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், நிபுணர்களின் மருத்துவ ஆலோசனையின்படியுமே அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதால், வாங்சுக்கின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தற்போதைய சூழலில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
சஃப்தர்ஜங் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் அடங்கிய கூட்டு மருத்துவக் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போது அவர் சீரான நிலையில் இருந்தாலும் தொடர் கண்காணிப்பு அவசியம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதற்கிடையே, மருத்துவமனைக் காவலில் இருந்தபடியே தனது மனைவி கீதாஞ்சலி மூலமாக சோனம் வாங்சுக் எக்ஸ் தளத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், "நாளை நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணி இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்.
பயமில்லாத மற்றும் அநீதியற்ற இந்தியாவை உருவாக்க இப்பேரணியை அனைவரும் பெரும் வெற்றியாக்க வேண்டும்" என்று அவர் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதால், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.