

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இந்த போராட்டக்குழுவினர் வருகிற 20-ந்தேதி நாடாளுமன்றத்துக்கு பேரணியாக சென்று மனு கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதுவரை தான் எப்படியும் உயிருடன் இருப்பேன் என வாங்சுக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் பேசும்போது, 'நான் உடல் ரீதியாக பல வீனமாக இருக்கிறேன், ஆனால் மனரீதியாக மிகுந்த வலிமையுடன் உள்ளேன். 20-ந்தேதி அமைதியான முறையில் பேரணியாக சென்று நாடாளுமன்றத்தில் நமது மனுவை அளிக்க வேண்டும். அதில் அதிக எண்ணிக்கையில் நீங்கள் பங்கேற்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
அதற்காக நான் என்ன விலை கொடுத்தாவது 20-ந்தேதி வரை உயிரோடு இருப்பேன் எனக்கூறிய அவர், அப்படி நீங்கள் வராமலோ அல்லது அந்த நிகழ்வு வெற்றிகரமாக அமையாமலோ போனால், நான் ஒரு பேயாகவும் திரும்பி வருவேன் என்று நகைச்சுவையாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கடந்த 21 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமானதால் அவர் காவல் துறையினரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.