

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். கொடிய விஷம் கொண்டு பாம்புகளை பார்த்தாலே தலைதெறிக்க ஓடி விடுவார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த பாம்பை பார்த்த மாணவர்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள பாலி மாவட்டத்தில் கோட்ரா பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல பள்ளிக்கூடம் செயல்பட்டது. ஒரு வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளி வகுப்பறைக்குள் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நுழைந்து மாணவர்களின் மேஜைகளுக்கு அருகில் சென்றது. இதைப்பார்த்து பயந்துபோன மாணவர்கள் அலறியபடி அறையை விட்டு வெளியே ஓடினர். ஆசிரியர்கள் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். பின்னர் வனவிலங்கு மீட்பாளரான சுரேந்திர சிங் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக பள்ளிக்கு வந்து மீட்பு பணியை மேற்கொண்டார்.
அப்போது அந்த நாகப்பாம்பு மாணவர்கள் பயன்படுத்தும் இரும்பு நாற்காலியை சுற்றி இறுக்கமாக பிடித்துக்கொண்டதால், அதை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும் பாம்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும், யாருக்கும் ஆபத்து நேராமல் இருக்கும் வகையிலும் சுரேந்திர சிங் சாதுர்யமாக செயல்பட்டு அந்த நாகப்பாம்பை பிடித்து பையில் பாதுகாப்பாக அடைத்து, பின்னர் அருகிலுள்ள காட்டில் பத்திரமாக விடுவித்தார். இந்த மீட்புப் பணியை மிகுந்த பதற்றத்துடன் கவனித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த நடவடிக்கை நிம்மதியை அளித்தது.