

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
முர்ஷிதாபாத்தில் உள்ள கோவிந்த்பூர் ரெயில்வே கிராசிங்கில், இன்று காலை 7 மணியளவில் பலர் அமரும் காரில் குழந்தைகள் பள்ளி சென்று கொண்டிருந்தனர்.
திறந்திருந்த ரெயில் தண்டவாளத்தை வாகனம் கடக்க முயன்றபோது புறநகர் ரெயில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதில் உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் அடங்குவர்.
மேலும் வாகனத்தில் இருந்த மற்ற பல குழந்தைகளும் பலத்த காயமடைந்தனர். ஒரு சைக்கிள் ஓட்டுநரும் மோதப்பட்டு காயமடைந்தார்.
உள்ளூர் மக்கள் உடனடியாக செயல்பட்டு, காயமடைந்த குழந்தைகளையும், நபரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காயமடைந்த குழந்தைகள் பெர்ஹாம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், ரெயில்வே காவல்துறையினரும் உள்ளூர் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ரெயில்வே கிராசிங்கைக் கடக்கும்போது விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை காவல்துறையினர் கண்டறிய முயன்று வருகின்றனர்.
10 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து ரெயில்வே டிவிஷனல் மானேஜர் உத்தரவிட்டுள்ளார். அலட்சியமாக செயல்பட்டதாக கேட்மேன் மற்றும் சூப்பர்வைசர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்குழந்தைகள் விபத்தில் சிக்கியுள்ளது பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.