ராஜஸ்தானில் வறட்சியை சமாளிக்க ரூ.242 கோடியில் செயற்கை ஏரி

தார் பாலைவனம் அமைந்துள்ள ராஜஸ்தானில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
Rajasthan Builds Artificial Lake
Published on

ராஜஸ்தானில் 28 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு செயற்கை ஏரியை தோண்டி அதன்மூலம் ஜெய்சல்மார் மற்றும் பார்மர் நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

தார் பாலைவனம் அமைந்துள்ள ராஜஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது.

இதையடுத்து வறட்சியை போக்கும் வகையில், சுமார் 1.41 பில்லியன் லிட்டர் கொள்ளளவு மற்றும் 33 அடி ஆழம் கொண்ட 28 கி.மீ. நீளமுள்ள ஒரு செயற்கையான ஏரியை 242 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான இந்திரா காந்தி கால்வாயில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக தண்ணீர் நிறுத்தப்படும் காலங்களில், ஒரு முக்கிய நீர்த்தேக்கமாகச் செயல்படும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

இந்திரா காந்தி கால்வாய் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நீர்வழிப் போக்குவரத்துப் பணிகளில் ஒன்றாகும்.

இது வடமேற்கு இந்தியாவின் வறண்ட பகுதிகளுக்கு நீர் வழங்குவதோடு, தார் பாலைவனப் பகுதிகளின் நீர் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் குடியிருப்பு ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் நீரைச் சேமித்து, சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, பின்னர் இரண்டு நகரங்களில் உள்ள 50 லட்சம் மக்களுக்கு விநியோகிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி பாலைவனமாக இருப்பதால், சேமிக்கப்பட்ட நீர் ஊடுருவி மணலில் விரைவாக உறிஞ்சப்படக்கூடும். இந்த அபாயத்தைக் குறைக்க, பொறியாளர்கள் நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியை உயர் அடர்த்தி கொண்ட பாலிஎத்தீனால் மூடினர்.

நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதி 300 மைக்ரான் தடிமன் கொண்ட ஒரு பிளாஸ்டிக்கால் விரிக்கப்பட்டுள்ளது. அதைப் பாதுகாப்பதற்காக அதன் மீது ஒரு மண் அடுக்கு இடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், நீர் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டு ஜூலை 2026-ல் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com