அரியானாவில் துணிகரம்: காதலுக்காக பேட்மிண்டன் வீரர் படுகொலை

சில நாட்கள் கழித்து அந்த இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
police
Published on

ராஜஸ்தானின் பிவாடியில் உள்ள சேத்பூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சிறந்த பேட்மிண்டன் வீரர். மாநில அளவில் விளையாடி பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளார்.

இவர் அரியானாவின் பரிதாபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். பெண்ணின் தாய்மாமா ராஜஸ்தானில் வசித்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

ஏப்ரல் 20-ம் தேதி அன்று காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறின. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர் பரிதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் அவர்மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடினர். அப்போது சிறுமியை மீட்டனர். இதையடுத்து, போலீசார் அந்த சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாயமான இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே, தன் மீதான வழக்கு விசாரணைக்காக மே 17 அன்று காவல் நிலையத்திற்கு அந்த இளைஞர் வந்துள்ளார். அவரைக் கண்டதும் சிறுமியின் தந்தை உறவினர்களை அங்கு வரவழைத்தார். அந்த இளைஞரை கடத்திச் சென்று, ரகசியமான இடத்தில் அடைத்து கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்.

சில நாட்கள் கழித்து அந்த இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். போலீசார் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிக்சை அளித்தனர். ஆனால் சிகிக்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனையில், அந்த இளைஞரை இரும்புக்கம்பியால் அடித்ததில் விலா எலும்புகள் உடைந்தும், நுரையீரலைக் குத்திக் கிழித்ததும், மண்டை ஓடு, மூக்கு எலும்புகள் உடைந்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, இளைஞரின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான பெண்ணின் தந்தையை போலீசார் கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

காதலுக்காக பேட்மிண்டன் வீரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com