42 நரேந்திர மோடி ஸ்டேடியம் பரப்பளவிலான ரெயில்வே நிலங்கள் ஆக்கிரமிப்பு: RTI-ல் அதிர்ச்சித் தகவல்!

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில்வே நில ஆக்கிரமிப்பு 32 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
Railways Land Encroachment
Published on

இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான சுமார் 1,068.54 ஹெக்டேர் நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய ரெயில்வே வாரியம் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் ஒட்டுமொத்த பரப்பளவானது, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் 'நரேந்திர மோடி ஸ்டேடியத்தின்' 42 மடங்கு பரப்பளவிற்குச் சமம் அல்லது சுமார் 1,496 சர்வதேச கால்பந்து மைதானங்களின் பரப்பளவிற்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளில் 32% அதிகரிப்பு:

ஊடகம் ஒன்று தாக்கல் செய்த RTI விண்ணப்பத்திற்கு ரெயில்வே வாரியத்தின் நிலம் மற்றும் வசதிகள் இயக்குநரகம் அளித்துள்ள பதிலில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்வே நில ஆக்கிரமிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

2020-21 நிதியாண்டு: 810.31 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு.

2023-24 நிதியாண்டு: ஒரே ஆண்டில் 268 ஹெக்டேர் நிலம் கூடுதலாக ஆக்கிரமிக்கப்பட்டு, 1,078.55 ஹெக்டேராக உயர்ந்தது.

2024-25 நிதியாண்டு: சிறிய சரிவுடன் 1,068.54 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பில் நீடிக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில்வே நில ஆக்கிரமிப்பு 32 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்த தரவுகளின்படி, இந்திய ரெயில்வேயிடம் உள்ள மொத்தம் 4.99 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், சுமார் 0.21% நிலம் தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது.

நத்தை வேகத்தில் நிலம் மீட்பு நடவடிக்கை:

ஒருபுறம் ஆக்கிரமிப்புகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், அவற்றை மீட்கும் பணி மிக மந்தமாகவே நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரெயில்வே துறையினரால் வெறும் 98.02 ஹெக்டேர் நிலம் மட்டுமே ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட நிலங்களின் பயன்பாடு:

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் நிலங்கள், ரெயில்வேயின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களான பல வழித்தடப் பணிகள் , புதிய ரெயில் பணிமனைகள், பயணிகள் மற்றும் சரக்கு முனையங்கள் அமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உடனடிப் பயன்பாடு இல்லாத நிலங்கள் வணிக ரீதியிலான மேம்பாட்டிற்காக 'ரெயில் நில மேம்பாட்டு ஆணையத்திடம்' ஒப்படைக்கப்படுகின்றன.

ரயில்வே வாரியத்தின் அலட்சியம்?

இந்த RTI பதிலில் நில ஆக்கிரமிப்பை விடவும், ரெயில்வே வாரியம் தரவுகளைப் பராமரிக்கும் லட்சணம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்ற வரலாற்றைக் கேட்டதற்கு, தங்களிடம் "கடந்த 5 ஆண்டுகாலத் தரவுகள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகின்றன" என ரெயில்வே வாரியம் கைகளைக் கழுவியுள்ளது.

இதன் மூலம், பல தசாப்தங்களாகத் தொடரும் இந்த தேசியப் பிரச்சனையைக் கண்காணிக்க மத்திய அரசிடம் முறையான நீண்டகாலத் தரவுத்தளம் இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாநில வாரியான விபரங்கள் இல்லை:

எந்தெந்த மாநிலங்களில் அதிக அளவில் ரெயில்வே நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு, "இடங்கள் வாரியான ஆக்கிரமிப்பு விவரங்கள் இந்தத் தலைமை அலுவலகத்தில் இல்லை; அந்தந்த மண்டல ரெயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்" எனத் தகவல் தந்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com