

கேரளம் மாநில சட்டசபைக்கான பதவிக்காலம் வருகிற மே 23-ந்தேதி முடிவடைகிறது. இதனால் கேரளத்தில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ந்தேதி ஒரேகட்டமாக நடத்தப்படுகிறது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என மொத்தம் 2,039 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
கேரளம் மாநிலத்தை பொருத்தவரை கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆகியவை களத்தில் உள்ளன.
தற்போது ஆட்சி பொறுப்பில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதே நோக்கில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரும் தேர்தல் களம் காணுகின்றனர்.
கேரளம் மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே இருக்கிறது. மேலும் பிரசாரத்திற்கு 14 நாட்களே அவகாசம் இருக்கின்றது. தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள், தங்களின் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கட்சி தலைவர்கள் கேரளம் மாநிலத்துக்கு அடுத்தடுத்த நாட்களில் வர உள்ளனர்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக கேரளத்திற்கு நாளை (25-ந்தேதி) வருகிறார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் கேரளத்துக்கு வர உள்ளனர்.
இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 29-ந்தேதி கேரளம் வருகிறார். அவர் திருச்சூரில் நடைபெறும் ரோடுஷோ மற்றும் பாலக்காட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து, கேரளத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர் மற்றும் பலர் கேரளம் மாநிலத்துக்கு வர உள்ளதாக மாநில பொதுச்செயலாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருவதால் கேரளம் மாநில பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.