

இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மோல்டோவா, வட மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இன்று (ஜூலை 19) தனது வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்த மூன்று நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தவும் இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் மோல்டோவா நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறை ஆகும். இப்பயணத்தின் போது, மோல்டோவா அதிபர் மாயா சாந்துவை சந்தித்து குடியரசுத் தலைவர் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
நாடாளுமன்றத் தலைவர் இகோர் குரோசு மற்றும் மோல்டோவா-இந்தியா நாடாளுமன்ற நட்புத் குழுவின் உறுப்பினர்களைச் சந்திக்கிறார். மேலும், அங்கு நடைபெறும் வர்த்தக மன்றக் கூட்டத்தில் உரையாற்றுவதுடன், மோல்டோவாவில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் நேரில் சந்தித்துக் கலந்துரையாட உள்ளார்.
மோல்டோவாவைப் போலவே, வட மாசிடோனியா நாட்டிற்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். வட மாசிடோனியா அதிபர் சிலியானோவ்ஸ்கா-டவ்கோவா, அந்நாட்டுப் பிரதமர் மற்றும் நாடாளுமன்றத் தலைவர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்.
வட மாசிடோனியா நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்புரையாற்ற உள்ளார். அத்துடன் இந்தியா-வட மாசிடோனியா வர்த்தக மன்றக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். வேளாண்மை, மருந்தகத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐடி சார்ந்த சேவைகள் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதில் இந்த சந்திப்பு கவனம் செலுத்தும்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவிற்கு, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் செல்லும் முக்கியப் பயணம் இதுவாகும். ருமேனியா அதிபர், இடைக்காலப் பிரதமர் மற்றும் செனட் சபையின் தலைவர் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.
ருமேனியா-இந்தியா நாடாளுமன்ற நட்பு குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு, இந்தியா-ருமேனியா வர்த்தக மன்ற உரை மற்றும் அங்குள்ள இந்திய சமூகத்தினருடனான கலந்துரையாடல் ஆகியவை இப்பயணத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த 3 நாடுகளின் பயணமானது, ஐரோப்பிய பிராந்தியத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள், கல்வி மற்றும் இருநாட்டு மக்களிடையேயான கலாச்சாரப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவதில் இப்பயணம் புதிய வேகத்தை ஏற்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.