

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில் கொல்கத்தா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள ஹூக்ளி ஆற்றங்கரையில் நேரத்தைச் செலவிட்டார்.
ஹூக்ளி நதியில் படகுப் பயணம் மேற்கொண்ட அவர் நதியில் முக்கிய இடங்களை தனது கேமராவில் படம் பிடித்து மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
அதில் அவர் ஹூக்ளி நதி மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. வங்காளிகளின் வாழ்வில் கங்கைக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு, அதன் நீர் ஒரு பண்டைய நாகரிகத்தின் ஆன்மாவைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் அவர் “ஒவ்வொரு வங்காளிக்கும் கங்கை ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. கங்கை வங்காளத்தின் ஆன்மாவில் பாய்கிறது என்று கூறலாம். அன்னை கங்கைக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதற்காக ஹூக்ளி நதிக்கரையில் நேரம் செலவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, பிரதமர் ஆற்றங்கரையோரம் படகோட்டிகள் மற்றும் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களுடன் கலந்துரையாடினார். படகோட்டிகளின் கடின உழைப்பைப் பாராட்டிய அவர், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த இந்த கலந்துரையாடல் தனக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியதாகக் கூறினார்.
இதனை எக்ஸ் தளத்தில் அவர் “கடின உழைப்பு போற்றத்தக்க படகோட்டிகளையும், காலை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஹூக்ளி நதிக்கரையில், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காகவும், மாபெரும் வங்காள மக்களின் செழிப்புக்காகவும் உழைப்பதில் எங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம்,” என்று குறிப்பிட்டு உள்ளார்.