

மேற்கு வங்காளத்தில் நடந்த முதற்கட்ட தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாகி இருப்பது பா.ஜ.கவின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் முதற்கட்டமாக 152 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் வரலாறு காணாத வாக்குப்பதிவு காணப்பட்டது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி மகிழ்ச்சியும், வெற்றி குறித்த நம்பிக்கையும் வெளியிட்டு உள்ளார்.
அங்கு 2-வது கட்ட தேர்தலுக்காக நாடியா மாவட்டத்தில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கிருஷ்ணாநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக கூறியதாவது:-
மேற்கு வங்காளத்தில் கடந்த 50 ஆண்டு தேர்தல் வரலாற்றில் இந்த முறைதான் வன்முறைகள் மிகக்குறைவாக நடந்துள்ளன.
முதற்கட்ட தேர்தலில் இன்று (நேற்று) இதுவரை நடந்துள்ள வாக்குப்பதிவு தொடர்பாக எனக்கு கிடைத்த தகவல்படி, இது ஒரு மாற்றத்துக்கான தேர்தலாக இருக்கப்போகிறது.
எங்கெல்லாம் மக்கள் எழுச்சியாக வந்து வாக்களிக்கிறார்களோ, அங்கெல்லாம் பா.ஜ.க வென்று வருகிறது. அந்தவகையில் மேற்கு வங்காளத்திலும் பா.ஜ.க மகத்தான வெற்றி பெறுவதையே இது உறுதியாக காட்டுகிறது.
மேற்கு வங்காளத்தில் நான் தெருவோரக்கடையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டேன். ஆனால் அதன் காரணத்தை திரிணாமுல் காங்கிரசார் உணர்கிறார்கள்.
மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக 10 உறுதிமொழிகள் அறிவித்து இருக்கிறேன். மோடியின் உறுதிமொழி என்றால் தானாகவே உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்று பொருள்.
இந்த முறை மாநிலத்தின் பல மாவட்டங்களில் திரிணாமுல் காங்கிரசால் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாது. ஊடுருவல்காரர்களுக்கு உதவுதல் என்ற திரிணாமுல் காங்கிரசின் மந்திரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.
ஏனெனில் இது இந்த நிலத்துக்கு எதிரானது. மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்குவது வேகம் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.