

கேரள மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.
பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் அடுத்தடுத்து கேரளம் வர உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளம் வந்தடைந்தார். விமானத்தில் வந்து, அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் பாலக்காட்டில் உள்ள மெர்சி கல்லூரி மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து கொட்டா மைதானத்திற்கு ரோடு ஷோ மூலம் சென்ற அவர் அங்கு நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
கேரளாவில் போட்டியிடும் கூட்டணிகளில் ஒன்று ஊழல் என்றால், மற்றொரு கூட்டணி மெகா ஊழல்.
இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களைப் போலவே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் நிலைமை மோசமாகத்தான் உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவைப் பாருங்கள். அங்கேயும் பெரும்பாலான வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. இமாசல பிரதேசமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதுதான் காங்கிரசின் ஆட்சி மாடல்.
காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியின் அனைத்துக் கொள்கைகளும் ஓட்டு வங்கி அரசியலுக்காக மட்டுமே.
மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் குறைவாக இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
போர் நடந்து வரும் நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். அங்கு சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கேரளாவுக்கு ஒதுக்கிய நிதியைவிட, தற்போது நாங்கள் 5 மடங்கு நிதி வழங்கி உள்ளோம் என தெரிவித்தார்.