

2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இஸ்ரேல் - காசா மோதலின்போது கொல்லப்பட்ட 5 வயது பாலஸ்தீன சிறுமியின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' என்ற பாலஸ்தீன படம் இந்தியாவில் திரையிடப்படுவதற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டைப் பெற்றுள்ள இப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்து வருகிறது.
படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுக்கும் அளவிற்கு வன்முறை, நிர்வாணம் அல்லது எந்தவொரு அரசியல் வசனங்களோ இடம்பெறவில்லை என நந்த்வானா தெரிவித்துள்ளார்.
படத்தின் இந்திய விநியோகஸ்தரான மனோஜ் நந்த்வானா, மத்திய திரைப்பட வாரியம் எழுத்துப்பூர்வமான விளக்கம் எதுவும் அளிக்காமல், வாய்மொழியாகவே ‘உணர்திறன் மிக்கதாகக் கருதப்படுகிறது’ என்றுக்கூறி படத்தை நிராகரித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா மற்றும் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழா உட்பட பல இந்தியத் திரைப்பட விழாக்களில் ஏற்கனவே இப்படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திரைப்படத்தை வெளியிடுவது இந்தியா-இஸ்ரேல் உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர் ஒருவர் அவரிடம் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.
மேலும் "திரைப்படம் மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குழு எப்போது அமைக்கப்படும் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அதற்குள் திரைப்படம் காலாவதியாகிவிடும்.” என்றும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக “ஒரு திரைப்படத்தைத் திரையிடுவது என்பது நமது சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தின் பிரதிபலிப்பாகும்; இதற்கும், அரசாங்கங்களுக்கு இடையிலான உறவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை,” என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தடையை "வெட்கக்கேடானது" என்றும் விமர்சித்துள்ளார்.
கௌதர் பென் ஹனியா இயக்கிய இத்திரைப்படம், இஸ்ரேலின் தாக்குதலின்போது காரில் சிக்கிக்கொண்ட பாலஸ்தீனிய சிறுமி ஹிந்த் ரஜபின் வாழ்க்கையையும், அவரை மீட்க செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும் சித்தரிக்கிறது.
82வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்ற இந்தப் படம், ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலில் இருந்தபோது இதன் திரையிடல் நடைபெற்றது.
இஸ்ரேலுடன் தூதரக உறவுகளைப் பேணிவரும் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இத்தாலி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.