

டெல்லி போலீசார் சோனம் வாங்சுக்கை போராட்டக் களத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் அபிஜித் தீப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் சப்தர்ஜங்மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.
சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சோனம் வாங்சுக் 20 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த போதிலும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி முதல் முறையாக இவ்விவகாரத்தில் பொதுவெளியில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"நாட்டில் கல்விக் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கும், போட்டித் தேர்வுகளை நடத்துவதில் அரங்கேறி வரும் முறைகேடுகளுக்கும் எதிராக நடக்கும் இந்தப் போராட்டம், இந்தியாவின் ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது.
அமைதியான முறையில் நடந்த போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு, சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றியிருப்பது, உண்மை மற்றும் அகிம்சையின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது.
அநாகரிகமும் வன்முறையும்தான் இந்த மோடி அரசின் முதன்மையான கொள்கைகளாக மாறிவிட்டன.
ஆனால், எந்தவிதமான அதிகார பலத்தாலும் இந்திய மாணவர்களின் மன உறுதியை நசுக்கிவிட முடியாது. மாணவர்களின் உரிமைக்காகப் போராடுபவர்களையோ அல்லது அவர்களின் மேல் நம்பிக்கை கொண்டு ஆதரவளிக்கும் எங்களைப் போன்றவர்களையோ இத்தகைய மிரட்டல்களால் பின்வாங்கச் செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.