அரசு விழாக்களில் மாநில பாடல்களுக்கு முதலிடம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

மாநிலப் பாடலுக்கும் தேசிய கீதத்திற்கும் நடுவில் பிற எந்தவொரு பாடலையும் பாட அனுமதி இல்லை.
National Anthem
Published on

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு புதிதாக பொறுப்பேற்ற நிலையில் முதலமைச்சர் பதவியேற்பு விழா, அமைச்சர்கள் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை தொடர்ந்து 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

முதலமைச்சர் விஜய் கோரிக்கை:

கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்தும் கவர்னர் மாளிகை மத்திய அரசு விதிமுறைகளை தான் பின்பற்றும் என அமைச்சர்கள் விளக்கம் கொடுத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.அப்போது அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை பரீசிலித்த மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்குப் புதிய வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது. அதன்படி சில மாநிலங்களில் தேசிய கீதத்துடன் மாநிலப் பாடலும் பாடப்பட்டு இசைக்கப்படுகிறது.

முதலில் மாநிலப் பாடல்கள்:

தேசிய கீதத்துடன் மாநிலப் பாடல் பாடப்படும்போதெல்லாம் தேசியப் பாடலும் தேசிய கீதமும் ஒன்றாகவே பாடப்பட வேண்டும். முதலில் தேசியப் பாடல் பாடப்பட்டு அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். மேலும் ஒருவேளை மாநில பாடல் பாடும் மாநிலங்களில் முதலில் மாநிலப் பாடல்கள் பாடப்பட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து தேசியப் பாடலும் தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தேசிய பாடல் மற்றும் தேசிய கீதத்தின் சரியான வரிகள் மற்றும் எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்ற விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதேபோன்று, எந்தெந்த நிகழ்ச்சிகளில் கட்டாயம் இரண்டு பாடல்களையும் பாட வேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி இனி தமிழக அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்படும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com