ஸ்ரீ கிருஷ்ணரை போல.. நாசிக் மதமாற்ற வழக்கில் 5 மாத கர்ப்பிணி நீடா கானுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் சொன்ன காரணம்

42 நாட்கள் தலைமறைவாக இருந்த நீடா கானை, கடந்த மே 7 அன்று சத்ரபதி சம்பாஜிநகரில் போலீசார் கைது செய்தனர்.
 நீடா கான்
நீடா கான்
Published on

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியர்களிடம் கட்டாய மதமாற்றம், பாலியல் அத்துமீறல் நடந்ததாக அண்மையில் சர்ச்சை வெடித்தது.

பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் அளித்த நிலையில் நாசிக் போலீஸார் 9 எப்ஐஆர் பதிவு செய்து விசாரணைக் குழுவை அமைத்தனர். இந்த வழக்கின் 8 குற்றவாளிகளில் நிதா கானும் ஒருவர்.

மதமாற்றம்

அவர் சக பெண் ஊழியர் ஒருவருக்குப் புர்கா மற்றும் இஸ்லாமிய மதப் புத்தகங்களை வழங்கியதாகவும், மொபைலில் மதச் செயலிகளை நிறுவச் செய்து தொழுகை செய்யக் கட்டாயப்படுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

தலைமறைவு - கைது

வழக்குப்பதிவு செய்யப்பட்டவுடன் 42 நாட்கள் தலைமறைவாக இருந்த நீடா கானை, கடந்த மே 7 அன்று சத்ரபதி சம்பாஜிநகரில் போலீசார் கைது செய்தனர்.

நீடா கான் 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் ஜாமீன் கோரி அவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நாசிக் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ஜி. ஜோஷி, நீடா கானின் கர்ப்பம் மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ரூ.75,000 பிணைத் தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஸ்ரீ கிருஷ்ணர்

தனது உத்தரவில் அவர், "குற்றம் சாட்டப்பட்ட நீடா கான் 5 மாத கர்ப்பிணி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சிறையில் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல ஒரு குழந்தை பிறப்பதையோ, அதனால் பிற்காலத்தில் அக்குழந்தை எதிர்கொள்ளும் சமூக அவமதிப்பையோ யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பிறக்கப்போகும் குழந்தையின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான பிறப்பைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இவருக்கு ஜாமீன் வழங்குவதே சரியானது." என தெரிவித்தார்.

நிபந்தனை

இருப்பினும் நீடா கானுக்கு பல நிபந்தனைகளையும் விதித்து ஜோஷி உத்தரவிட்டார்.

அதன்படி, பாதிக்கப்பட்ட பெண்ணையோ அல்லது சாட்சிகளையோ எந்தக் காரணத்தைக் கொண்டும் தொடர்புகொள்ளக் கூடாது, அவர்களை அச்சுறுத்தக் கூடாது.

பாதிக்கப்பட்ட பெண் பணிபுரியும் அலுவலகத்திற்கோ அல்லது அவர் வசிக்கும் பகுதிக்குள்ளோ செல்லக் கூடாது.

வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்று நீடா கானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

X

Maalai Malar
www.maalaimalar.com