நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது- திமுக வெளிநடப்பு

மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
bjp
Published on

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

அனல் பறக்கும்

இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனால் இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ்-தி.மு.க. இடையேயான கூட்டணி முறிவு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு போன்ற அரசியல் ரீதியிலான மாற்றங்களுக்கு இடையே நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சட்ட திருத்த மசோதா

சமீபத்தில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள், இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. முக்கியமாக, வருமான வரி சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவும் அறிமுகப்படுத்தப்படும். தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத்திருத்த மசோதா, பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவையும் தாக்கலாக உள்ளன.

அனைத்து கட்சி கூட்டம்

பாராளுமன்ற கூட்டம் சுமூகமாக நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. எனவே பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவது வழக்கம்.

இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று தொடங்கியது.

திமுக வெளிநடப்பு

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராக திரும்பி உள்ள அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றதைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பல்வேறு விஷயங்கள் பற்றி பேச உள்ளனர். குறிப்பாக, ஜந்தர்மந்தரில் இருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வெளியேற்றிய விவகாரம் பற்றி அனைத்து எதிர்கட்சியினரும் பேச இருக்கிறார்கள்.

மேலும், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரமும் இன்றைய கூட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com