

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபலமான ரெட் சாலையில் (Red Road) ரமலான் தொழுகை நடைபெற்றது. அதன்பின் அங்கிருந்தவர்களுக்கு மத்தியில் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மோடியும், பாஜக- வும் உங்கள் வாக்குரிமையைப் பறிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் இறுதிவரை போராடுவோம்.
நீங்கள் (பிரதமர் மோடி) வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தலைவர்களுடன் கைகுலுக்கி, நட்பைப் பற்றிப் பேசுகிறீர்கள். அது உங்கள் விருப்பம். நான் அனைத்து நாடுகளையும் மதிக்கிறேன். ஆனால், நீங்கள் இந்தியாவுக்குத் திரும்பியதும் திடீரென இந்து- முஸ்லிம் குறித்த பேச்சுகள் எழுகின்றன. மக்கள் ஊடுருவல்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அதன்பின், பெயர்களை நீக்குமாறும், மக்களை ஊடுருவல்காரர்கள் என்று முத்திரை குத்துமாறும் நீங்கள் கோருகிறீர்கள். உண்மையில் நீங்களும் உங்கள் அரசுமே மிகப்பெரிய ஊடுருவல்காரர்கள் என்று நான் கூறுவேன்.
SIR நடவடிக்கையின்போது, பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. நான் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கதவுகளையும், ஏன் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளையும் கூடத் தட்டியுள்ளேன். மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நான் இப்போதும் நம்புகிறேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.