எத்தனால் தயாரிக்க வழங்கப்பட்ட அரிசி தனியார் நிறுவனத்துக்கு கடத்தல் - ம.பியில் சர்ச்சை - கார்கே சாடல்

எத்தனால் என்ற பெயரில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள அரிசி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கார்கே, மோகன் யாதவ்
கார்கே, மோகன் யாதவ்
Published on

மத்திய பிரதேசத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக ஒதுக்கப்பட்ட அரிசி தனியார் நிறுவனத்துக்கு திருப்பிவிடப்பட்டது சர்ச்சையாகியுள்ள நிலையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

எத்தனால் அரிசி திரட்டு

முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் இந்திய உணவுக்கழகம் மூலம் மானிய விலையில் எத்தனால் ஆலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.

இந்த அரிசி அங்குள்ள தனியார் ஆலைகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு

அரசு கிடங்குகளுக்கே மீண்டும் சுழற்சி முறையில் விற்கப்படுவதாக போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக விசாரிக்க அம்மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

கார்கே விமர்சனம்

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே,

"மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் அடுத்தடுத்து ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது எத்தனால் என்ற பெயரில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள அரிசி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் இளம் பெண்களின் ஊட்டச்சத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய அரிசி, இங்குப் லாப வெறிக்காகத் திசைதிருப்பப்பட்டுள்ளது.

அரிசி ஆலை அதிபர்கள், எத்தனால் மாபியாக்கள் மற்றும் பாஜக அரசின் ஆதரவோடு சுமார் 5 லட்சம் மெட்ரிக் டன் அரிசி முறைகேடு செய்யப்பட்டுள்ளது." என குற்றம்சாட்டியுள்ளார்.

மோகன் யாதவ் முறைகேடு

ஏற்கனவே உஜ்ஜைன் நகரில் அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் நெடுஞ்சாலைப் பாதைகள் எங்கு அமையவிருந்தனவோ, சரியாக அதே பகுதிகளில் முதலமைச்சரின் உறவினர்கள் பெயரில் பெருமளவில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

கார்கே தாக்கு

இதுகுறித்து தன் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள கார்கே,

"அரசின் திட்டங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, சொந்த பாக்கெட்டுகளை நிரப்புவதற்காக நடத்தப்பட்டுள்ள இந்த நில விரிவாக்க முறைகேடு, நேரடியாக முதலமைச்சர் மீதே கேள்விகளை எழுப்பியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் ஊழல்கள், முறைகேடுகள் எதற்கும் பாஜக அரசு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

மத்திய பிரதேசம் பாஜகவின் ஊழல் மற்றும் கொள்ளையின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

ஆனால், எப்போதும் போல பிரதமர் மோடி இந்த விவகாரத்திலும் ஆழ்ந்த மௌனம் காக்கிறார்.

மோடி-அமித் ஷா தங்களது அதிகார திமிரால் பொது வாழ்வில் இருக்க வேண்டிய பொறுப்புக்கூறல் என்ற பண்பையே மிதித்துத் துவம்சம் செய்துவிட்டனர்" என்று சாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com