உ.பி. தீ விபத்து தொடர்பாக 4 பேர் கைது... காவல் துறை அதிரடி!

அலிகஞ்ச் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
உ.பி. தீ விபத்து தொடர்பாக 4 பேர் கைது... காவல் துறை அதிரடி!
Published on

லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் உத்தர பிரதேச தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், பெயரிடப்பட்ட ஆறு பேர் மற்றும் பிறர் மீது அலிகஞ்ச் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

நான்கு பேர் கைது:

கைது செய்யப்பட்டவர்கள் அலிகஞ்ச் செக்டார்-டி பகுதியை சேர்ந்த ராம் கிருஷ்ணா உபாத்யாய் (43), சீதாபூர் சாலை பகுதியை சேர்ந்த வீரேந்திர பிரசாத் சுக்லா (62) மற்றும் பாலகஞ்ச் பகுதியைச் சேர்ந்த துஷார் கிருஷ்ணா ஜெய்ஸ்வால் (31) மற்றும் கேஷவ் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் சாஹூ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்த கட்டிடத்தின் கூட்டு உரிமையாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்கட்டிடம் குடியிருப்பு பயன்பாட்டிற்காகவே அனுமதி பெற்றிருந்தது என்றும், ஆனால் சட்டவிரோதமாக வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விசாரணை:

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அலிகஞ்ச் உதவி காவல் ஆணையர் (ACP) சஷி பிரகாஷ் மிஸ்ரா பி.டி.ஐ. (PTI) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மேலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று (திங்கள்கிழமை) மதியம் அலிகஞ்சில் உள்ள மூன்று மாடி வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இக்கட்டிடத்தில் மாணவர்கள் கூடியிருந்த அனிமேஷன் மையம் ஒன்றும், கீழ் தளங்களில் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையம் மற்றும் மருத்துவமனை ஒன்றும் செயல்பட்டு வந்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com