

மேற்கு ஆசிய போரின் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் எரிசக்தி வினியோகத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் வீடுகளில் சமையல் செய்ய கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கிராமங்களில் உள்ள மக்கள் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இதனால் அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுத்து உள்ளது.
இதற்கிடையே இந்த நடவடிக்கையில் ஒரு அம்சமாக, மண்ணெண்ணெய் படிப்படியாக நிறுத்தப்பட்டு இருந்த 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மண்ணெண்ணெய் பொது வினியோகம் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக அரசின் விதிகள் திருத்தப்பட்டு உள்ளன.
இந்த 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொது வினியோகத் திட்ட மண்ணெண்ணெயை ஒதுக்கீடு செய்ய, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வினியோகம் 60 நாள் அவசரகால நடவடிக்கையாக இருக்கும்.
திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்கள் குறிப்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான விற்பனை நிலையங்கள் மண்ணெண்ணெயைச் சேமித்து வினியோகிக்க அனுமதிக்கப்படும். ஒவ்வொரு விற்பனை நிலையமும் 2,500 லிட்டர் வரை மண்ணெண்ணெயைச் சேமித்து வைக்கலாம். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் ஒரு மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 சேவை நிலையங்களை அடையாளம் காணலாம்.
டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், சண்டிகர், அரியானா, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மத்திய பிரதேசம், சிக்கிம், தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கோவா, லட்சத்தீவு, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இது அமல்படுத்தப்படுகிறது.