சமோசா வாங்குவதற்காக ரெயிலை நிறுத்தினாரா லோகோ பைலட்?- இணையத்தில் பரவும் வீடியோ

பயணிகளுக்கு தாமதத்தை ஏற்படுத்தியதோடு ரெயில்வே விதிகளையும் மீறிவிட்டார் என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்து கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.
இணையத்தில் பரவும் வீடியோ காட்சிகள்.
Published on

சமோசா வாங்குவதற்காக லோகோ பைலட் (ரெயில் ஓட்டுநர்) ஒருவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவிற்கு, ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

சமோசா

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் - மௌ ரெயில்வே பிரிவில் உள்ள ராவ் பகுதியில், ரங்வாசா சாலைக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், லோகோ பைலட் ரெயிலில் இருந்து கீழே இறங்கி, அருகில் உள்ள ஒரு கடையில் இருந்து கவரில் சமோசாவை வாங்கிக்கொண்டு மீண்டும் ரெயிலில் ஏறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும், சமோசா வாங்குவதற்காக லோகோ பைலட் பயணிகள் ரெயிலை நடுவழியில் நிறுத்தி, பயணிகளுக்கு தாமதத்தை ஏற்படுத்தியதோடு ரெயில்வே விதிகளையும் மீறிவிட்டார் என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்து கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.

ரெயில்வே நிர்வாகத்தின் விளக்கம்

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அதன் பின், பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறான புரிதல் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சமூக வலைத்தளங்களில் கூறப்படுவது போல அது பயணிகள் ரெயில் அல்ல. அது ஒரு சரக்கு ரெயில். அந்த சமயத்தில் அந்த குறிப்பிட்ட ரெயில் பாதையில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இந்த பராமரிப்புப் பணிகள் காரணமாக, அந்த சரக்கு ரெயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதே இடத்தில் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரெயில் உடனடியாக நகரப் போவதில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே, லோகோ பைலட் கீழே இறங்கி அருகில் இருந்த கடையில் சமோசா வாங்கி வந்துள்ளார்.

எனவே, சமோசா வாங்குவதற்காக ரெயில் நிறுத்தப்படவில்லை என்றும், பராமரிப்புப் பணிகளுக்காக ரெயில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில் மட்டுமே லோகோ பைலட் கீழே இறங்கிச் சென்றார் என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு ரெயில்வே நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com