

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால், நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதேசமயம் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். குறிப்பாக இதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை எடுத்துக்கூறினர்.
அதாவது பல இந்திய மொழிகள் இருந்தாலும், 3 மொழிகளுக்கான பாடப்புத்தகங்கள் மட்டுமே NCERT-ல் கிடைப்பதாக குறிப்பிட்டனர். இது மொழித்திணிப்பிற்கு வழிவகுக்கும் என தெரிவித்தனர்.
மேலும் மற்ற மொழிப் பாடத்திட்டங்களை திடீரென நிறுத்தும்போது அந்த மொழி ஆசிரியர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும். இந்திய மொழி கற்பித்தலுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.
அனைத்து வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, ஒரு மொழியை கற்பது ஒருபோதும் வீணாகாது என தெரிவித்து, ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால், அவர்களை மீண்டும் நாங்கள் பணியில் அமர்த்துகிறோம் என பதிலளித்தது.
தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் கோரியநிலையில், 10 நாட்களுக்குள் பதில் மனுத்தாக்கல் செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.