சட்டவிரோதமாக மகள்களுக்கு அரசு வேலை: KPSC தலைவரை சஸ்பெண்ட் செய்த ஆளுநர்..!

தனது மகளுக்கு ஓ.பி.சி இட ஒதுக்கீடு மற்றும் கிரீமி லேயர் விலக்கு கோரியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
Karnataka Governor sacks KPSC chief
Published on

கர்நாடக பொது சேவை ஆணையத்தின் தலைவர் சிவசங்கரப்பா என்பவர் தனது மகள்களுக்கு அரசுப் பதவியில் பணி நியமனம் செய்ய முயன்ற குற்றச்சாட்டை தொடர்ந்து, அம்மாநில ஆளுநர் அவரை பணியிடை நீக்கம் செய்தார்.

கர்நாடக பொது சேவை ஆணையத்தின்(KPSC) தலைவராக சிவசங்கரப்பா எஸ். சஹூகர் என்பவர் பணியாற்றி வந்தார்.

இவரின் மகள்களில் ஒருவர், தனது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.40,000 எனக் கூறி, உண்மைகளை மறைத்து வருமானம் மற்றும் சாதிச் சான்றிதழ், ஓ.பி.சி இட ஒதுக்கீடு சான்றிதழ் ஆகியவற்றை பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் அவரின் தந்தை கர்நாடக பொது சேவை ஆணையத்தின் தலைவர் என்பதை மறைத்து சான்றிதழ் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் KPSC தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த, இந்த விவகாரத்தை அரசியலைப்பு 317(1) பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பரிந்துரை செய்தார்.

மேலும் தொழில்துறை விரிவாக்க அலுவலர் பதவிகளுக்கு தனது இரண்டு மகள்களை சட்டவிரோதமாக தேர்ந்தெடுக்க சிவசங்கரப்பா உதவியதாகவும் ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.

கர்நாடகாவில் உள்ள ஒரு பொது சேவை ஆணையத்தின் தலைவரின் பிள்ளைகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கோரத் தகுதி இல்லை என்று 2002 மார்ச் 30 தேதியிட்ட அரசாணை ஒன்றையும் ஆளுநர் அலுவலகம் மேற்கோள் காட்டியது.

இதையடுத்து உத்தரவுகள் வரும் வரை, ஆணையத்தின் மூத்த உறுப்பினரை KPSC தலைவரின் பணிகளை மேற்கொள்ளுமாறு கர்நாடக ஆளுநர் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com